தமிழ்நாடு

கோவையில் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார் மு.க. ஸ்டாலின்

Published On 2024-08-09 07:59 GMT   |   Update On 2024-08-09 07:59 GMT
  • திட்டம் மூலம் தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 28 ஆயிரம் மாணவர்கள் பயன் பெறுகிறார்கள்.
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலமாக உக்கடம் புறப்பட்டு சென்றார்.

கோவை:

தமிழகத்தில் பெண்கள் உயர்கல்வி படிப்பதை ஊக்குவிக்கும் வகையில் அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி செயல்படுத்தி வருகிறார்.

இந்தநிலையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர் கல்வி பயின்று வரும் கல்லூரி மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். இந்த திட்டத்திற்கு தமிழ்ப்புதல்வன் திட்டம் என பெயர் சூட்டப்பட்டது.

அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்குவதற்கான தமிழ்ப்புதல்வன் திட்டம் மாநில அளவில் இன்று தொடங்கப்பட்டது. இதற்கான தொடக்கவிழா கோவையில் உள்ள அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடந்தது.

இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை விமான நிலையத்திற்கு வந்தார். பின்னர் அவர் கார் மூலமாக தமிழ்ப்புதல்வன் திட்ட தொடக்க விழா நடைபெற்ற கோவை ரேஸ்கோர்சில் உள்ள அரசு கலைக்கல்லூரி மைதானத்திற்கு சென்றார்.

அங்கு அவரை அமைச்சர்கள், கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி, மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

அதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழா மேடைக்கு சென்றார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் விழா தொடங்கியது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 28 ஆயிரம் மாணவர்கள் பயன் பெறுகிறார்கள். விழாவில் தமிழ்ப்புதல்வன் திட்டம் தொடர்பான சிறு வீடியோவும் ஒளிபரப்பப்பட்டது.

அதனை தொடர்ந்து கோவை செம்மொழி பூங்கா வளாகத்தில் அமைக்கப்படும் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் ஆகிய புதிய வளர்ச்சி திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

அதேபோல் பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயிரியல் துறை மற்றும் சமூக அறிவியல் துறைகளுக்கான புதிய கட்டிடங்கள் மற்றும் கோவை வ.உ.சி மைதானம் அருகே ரூ.1 கோடியில் கட்டப்பட்ட உணவு வீதி, புலியகுளம் அரசு மகளிர் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தையும் முதலமைச்சர் காணொலி வாயிலாக திறந்து வைத்து பேசினார்.

அதன்பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலமாக உக்கடம் புறப்பட்டு சென்றார். அங்கு உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரையிலான ரூ.481 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அத்துடன் அந்த மேம்பாலத்தில் காரிலும் பயணித்தார்.

கோவை மாநகரில் 2 நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் கருமத்தம்பட்டி கணியூர் இந்திரா நகர் பகுதிக்கு சென்றார். அங்கு 8 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் வெண்கல சிலையை திறந்து வைத்து பார்வையிட்டார்.

தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள கலைஞர் அறிவுசார் நூலகத்தை திறந்து வைத்து, 116 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சியின் கொடியினையும் ஏற்றி வைத்தார்.

இந்த விழாக்களில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், மாநகர மேயர், கவுன்சிலர்கள், மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட பொறுப்பு அமைச்சர் முத்துசாமி, மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தளபதி முருகேசன், தொ.அ.ரவி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதேபோல் முதலமைச்சர் சென்ற அனைத்து இடங்களிலும் தி.மு.க. நிர்வாகிகள் தொண்டர்கள் திரண்டு வந்து கைகளில் உதய சூரியன் சின்னம், தி.மு.க கொடியை பிடித்தபடி சாலையின் இருபுறங்களிலும் நின்று உற்சாகத்துடன் வரவேற்றனர்.

முதலமைச்சர் வருகையை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்பட அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

விழா நடைபெறும் இடமான அரசு கலைக்கல்லூரி பகுதி, உக்கடம், கணியூர், விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கோவையில் 3 விழாக்களையும் முடித்துக் கொண்டு பிற்பகலில் கோவை விமான நிலையத்திற்கு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து விமானம் மூலமாக மீண்டும் சென்னை செல்கிறார்.

Tags:    

Similar News