குட்டியுடன் அகழிக்குள் விழுந்த தாய் யானை- 1 மணி நேரத்திற்கு பின் வனத்துறையினர் மீட்டனர்
- யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்கும் வகையில் போஸ்பெராவையொட்டி பகுதியில் அகழிகள் வெட்டப்பட்டுள்ளன.
- அகழியையொட்டி ஜே.சி.பி எந்திரம் மூலம் வெட்டி யானை வருவதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவர்சோலை பேரூராட்சி எல்லையில் உள்ளது போஸ்பெரா. இந்த போஸ்பெரா பகுதி அடர்ந்த வனத்தையொட்டி உள்ளது.
இங்கு காட்டு யானைகள், சிறுத்தை, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன.
இந்த காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது.
யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்கும் வகையில் போஸ்பெராவையொட்டி பகுதியில் அகழிகள் வெட்டப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இன்று காலை யானைகள் வராமல் இருக்க வெட்டப்பட்ட அகழிக்குள் இருந்து யானை சத்தம் கேட்டது.
இதை பார்த்த பொதுமக்கள் அகழி அருகே சென்று பார்த்தனர். அப்போது காட்டு யானை ஒன்று தனது குட்டியுடன் அகழிக்குள் நின்றிருந்தது.
உடனடியாக மக்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் அகழிக்குள் விழுந்த குட்டி யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அகழியையொட்டி ஜே.சி.பி எந்திரம் மூலம் வெட்டி யானை வருவதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.
1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு காட்டு யானை தனது குட்டியுடன் மேலே வந்தது. பின்னர் அங்கிருந்து வனத்திற்குள் சென்றது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, அதிகாலை நேரத்தில் காட்டு யானை வனத்தைவிட்டு வெளியேறி தனது குட்டியுடன் வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக யானை குட்டியுடன் அகழிக்குள் விழுந்தது. தகவலின் பேரில் விரைந்து வந்து யானையையும், குட்டியையும் பத்திரமாக மீட்டு வனத்திற்குள் அனுப்பி விட்டோம் என்றனர்.