மாமல்லபுரத்தில் புழுதி பறக்கும் சாலையால் வாகன ஓட்டிகள் தவிப்பு
- திருக்கழுக்குன்றம்-மாமல்லபுரம் சாலையில் பல இடங்களில் மணல்கள் கொட்டி புழுதி பறக்கிறது.
- மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலை துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
மாமல்லபுரம்:
மாமல்லபுரம்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற உள்ளது. இதற்காக மாமல்லபுரம் அடுத்த பெருமாளேரி, குழிப்பாந்தண்டலம், எச்சூர் பகுதி ஏரிகளில், பொதுப்பணித் துறையினர் சவுடு மண் எடுத்து வருகின்றனர்.
மணல் ஏற்றிச்செல்லும் லாரிகள் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காமலம் பகல் நேரத்தில் மணல் மீது தார்ப்பாய் போடாமல் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் லாரிகள் அதிவேகமாக செல்வதால் அதில் இருந்த மணல் சாலையில் விழுந்து புழுதியாக மாறிவருகிறது.
இதனால் திருக்கழுக்குன்றம்-மாமல்லபுரம் சாலையில் பல இடங்களில் மணல்கள் கொட்டி புழுதி பறக்கிறது. முக்கியமாக வசந்தபுரி, அம்பாள் நகர் சாலையில் மணல் குவியல் ஏற்பட்டு, தற்போது பெய்த மழையால் சகதியாக மாறி தார்சாலை இல்லாத அளவுக்கு மறைந்துவிட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
மழை பெய்யும் போது அவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த மணல் சாலையில் செல்லும்போது வழுக்கி விழும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலை துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.