தமிழ்நாடு (Tamil Nadu)

கூட்டுறவு வங்கி சுவரில் துளையிட்டு 'மர்ம' நபர்கள் கொள்ளை முயற்சி

Published On 2024-06-21 04:46 GMT   |   Update On 2024-06-21 04:46 GMT
  • சில மர்ம நபர்கள் வங்கியின் பின்புறம் இருந்த சி.சி.டி.வி. கேமரா இணைப்பை துண்டித்துள்ளனர்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த துணிகர செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

திருச்சுழி:

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே புத்தனேந்தல் பகுதியில் பட்டமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கடன் சங்கம் இயங்கி வருகிறது. கடந்த 1977-ம் ஆண்டு கட்டப்பட்ட மிகவும் மோசமான நிலையில் உள்ள பழமையான கட்டிடத்தில் இந்த சங்கம் செயல்படுகிறது. இங்கு விவசாயிகளுக்கு தேவையான நகைக்கடன் உட்பட அனைத்து விதமான கடன்களும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் பட்டமங்கலம் கூட்டுறவு வங்கியில் வீரசோழன் அருகேயுள்ள வத்தாப்பேட்டை புதூரை சேர்ந்த முத்துப்பாண்டி (வயது 45) என்பவர் எழுத்தராகவும், கூடுதல் பொறுப்பு செயலராகவும் பணிபுரிந்து வருகிறார். மேலும் இவர் பாப்பாங்குளம் கூட்டுறவு செயலர் ஓய்வுபெற்ற நிலையில் பாப்பாங்குளம் கூட்டுறவு வங்கியையும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார்.

இதற்கிடையே முத்துப்பாண்டி வழக்கம்போல் நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து கூட்டுறவு வங்கியை பூட்டிய நிலையில் வீடு திரும்பினார். நேற்று காலை அவர் பாப்பாங்குளம் கூட்டுறவு வங்கிக்கு சென்று விட்டு மதிய வேளையில் பட்டமங்கலம் கூட்டுறவு வங்கிக்கு வந்தபோது வங்கி கதவுகள் திறந்து கிடந்தன. மேலும் வங்கியின் அலுவலக சுவர் உடைக்கப்பட்டிருந்தது கண்டு முத்துப்பாண்டி அதிர்ச்சியடைந்தார்.

இதனையடுத்து வங்கியை சுற்றி வந்து கட்டிடத்தை சரிபார்த்த போது கட்டிடத்தின் பின்பக்க சுவர் கடப்பாரை போன்ற ஆயுதங்களால் துளையிட்டிருந்ததை அறிந்தார். அதேபோல் லாக்கர் இருந்த பகுதியின் மேற்கூரையும் உடைக்கப்பட்டிருந்தது. பின்னர் அவர் வங்கிக்குள் சென்று லாக்கரை திறந்து பார்த்தபோது அதில் நகைகள் அனைத்தும் பத்திரமாக இருந்ததை கண்டு நிம்மதி பெரு மூச்சு விட்டார்.

இதுகுறித்து அவர் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நரிக்குடி போலீசார் கூட்டுறவு வங்கிக்குள் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிப்பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது நள்ளிரவில் கூட்டுறவு வங்கிக்கு வந்த அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் வங்கியின் பின்புறம் இருந்த சி.சி.டி.வி. கேமரா இணைப்பை துண்டித்துள்ளனர்.

தொடர்ந்து பின்பக்க சுவரை கடப்பாரையால் இடித்து துளையிட்ட கொள்ளையர்கள் வங்கிக்குள் செல்ல முயற்சி செய்துள்ளனர். பின்னர் கழிவறை அருகேயுள்ள ஜன்னல் பகுதியையும் கடப்பாரையால் இடித்து தள்ளி ஜன்னல் வழியாகவும் வங்கியினுள் நுழைய முயன்றுள்ளனர்.

ஆனால் வங்கியினுள் இயங்கி கொண்டிருந்த சி.சி.டி.வி. கேமராவை பார்த்ததும் கொள்ளையர்கள் போலீசிடம் சிக்கிக்கொள்வோம் என தெரிந்து அங்கிருந்து பக்கத்து கட்டிடத்திற்கு சென்ற மேற்கூரையை பிரித்து லாக்கர் இருக்கும் பகுதிக்கு சென்றுள்ளனர். வங்கி லாக்கரை உடைக்க முடியாததால் அங்கிருந்த ரூ.32 லட்சம் மதிப்புள்ள சுமார் 67 பவுன் நகைகள் தப்பியது.

கொள்ளை முயற்சி தோல்வியடைந்ததால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். கூட்டுறவு வங்கியில் லாக்கர் வசதி இருந்ததால் விவசாயிகள் மற்றும் பொது மக்களின் நகைகள் தப்பியது. மேலும் அங்கு வந்த விருதுநகர் கைரேகை நிபுணர்கள் வங்கியில் பல்வேறு இடங்களில் ஆய்வுகள் செய்தனர். மோப்பநாய் உதவியுடனும் சோதனை நடந்தது.

நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த துணிகர செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News