கவர்னர் மாளிகையில் நவராத்திரி கொலு
- சிறப்பு பூஜை நடைபெற்ற இடத்தில் விநாயகர், அயோத்தி பால ராமர் உள்பட பல்வேறு சாமி சிலைகள் இடம் பெற்றிருந்தன.
- கவர்னர் மாளிகையில் வருகிற 12-ந் தேதி வரை கொலு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
சென்னை:
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. கவர்னர் மாளிகையில் உள்ள பாரதி மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நவராத்திரி கொலுவை, கவர்னர் ஆர்.என்.ரவி பொதுமக்கள் பார்வைக்காக நேற்று தொடங்கி வைத்தார். கொலுவை காண கவர்னர் மாளிகை வந்த பொதுமக்களை, கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர். தொடர்ந்து, சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், கவர்னர் ஆர்.என்.ரவி, அவரது மனைவி லட்சுமி ஆகியோர் பங்கேற்று வழிபட்டனர்.
கொலுவில் 5 படிகளில் சிவன், பார்வதி, விநாயகர், முருகன், ராமர், சீதை, லட்சுமணன், அனுமன், கிருஷ்ணர், திருப்பதி வெங்கடாஜலபதி, அஷ்டலட்சுமி, லட்சுமி, சரஸ்வதி, துர்கை, விஷ்ணுவின் தசாவதாரங்கள், ராகவேந்திரர், நடராஜர், பாண்டுரங்கர், அய்யப்பன், காளி, சாய்பாபா உள்பட சாமி சிலைகள் இடம் பெற்றிருந்தன.
சிறப்பு பூஜை நடைபெற்ற இடத்தில் விநாயகர், அயோத்தி பால ராமர் உள்பட பல்வேறு சாமி சிலைகள் இடம் பெற்றிருந்தன.தொடர்ந்து, நவராத்திரி விழாவையொட்டி சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நவராத்திரி விழாவின் முதல் நாளான நேற்று, பாரதி மண்டபத்தில், பாரதி திருமகனின் வில்லிசை பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
கவர்னர் மாளிகையில் வருகிற 12-ந் தேதி வரை கொலு நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை கொலு வழிப்பாட்டு நிகழ்ச்சியும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையில் தமிழ் கலாசார நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளது. இதில், ஏற்கனவே விண்ணப்பித்த பொது மக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.