பக்தர் மார்பில் உரல் வைத்து உலக்கையால் அரிசி, மஞ்சள் இடிப்பு: குழந்தை இல்லாத பெண்களுக்கு வழங்கப்பட்டது
- ஆடி முதல் வெள்ளிக்கிழமையன்று அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
- அம்மனை வேண்டிக்கொண்டு உரலில் இடிக்கப்பட்ட மாவை குழந்தை இல்லாத பெண் பக்தர்கள் சாப்பிட்டனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த சு.பொலக்குணம் கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் 19-ம் ஆண்டு ஆடிமாத திருவிழா நேற்று நடைபெற்றது.
ஆடி முதல் வெள்ளிக்கிழமையன்று அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். பின்னர் அம்மன் வீதியுலா, கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.
இதையடுத்து, சு.பொலக்குணம் கிராமத்தில் வசிக்கும் பக்தரின் மார்பு மீது உரல் வைத்து அரிசி, மஞ்சள் ஆகியவை கொட்டப்பட்டு உலக்கையால் மாவு இடிக்கப்பட்டது.
உரலில் இடிக்கப்பட்ட மாவை உண்ணுபவர்களுக்கு திருமணம் கைகூடும், குழந்தை பேறு உண்டாகும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது.
இதனால், அம்மனை வேண்டிக்கொண்டு உரலில் இடிக்கப்பட்ட மாவை குழந்தை இல்லாத பெண் பக்தர்கள் சாப்பிட்டனர்.
இதைத்தொடர்ந்து, கோவிலில் அம்மன் ஊஞ்சல் தாலாட்டும், ஆன்மிக சொற்பொழிவு மற்றும் நாடகமும் நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.