புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது: தமிழகத்தில் ஜனவரி 1, 2-ந் தேதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு
- தென் மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்தாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- வடகிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது.
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு சராசரி அளவைவிட கூடுதலாக பெய்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் சென்னை மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களிலும் கடந்த வாரத்தில் தென் மாவட்டங்களிலும் கனமழை பெய்து வெள்ளக்காடாக்கியது.
வெள்ளப் பாதிப்பில் இருந்து மக்கள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் தென் மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்தாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை (31-ந் தேதி) மற்றும் 1-ந் தேதியில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை இலாகா தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் ஜனவரி 1 மற்றும் 2-ந் தேதியில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது.
வடகிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. மேலும் இந்திய பெருங்கடல் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக் கடல் பகுதி வரை இந்த மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் ஜனவரி 3-ந் தேதி வரை ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
ஜனவரி 1 மற்றும் 2-ந் தேதியில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று தெரிவித்துள்ளது. தென் மாவட்டங்களில் பலத்த மழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டு இருப்பதால் மாவட்ட நிர்வாகம் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகபட்சமாக ஊத்துவில்-22 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. நாலுமுக்கு-21 செ.மீ. காக்கச்சி-20, மாஞ்சோலை-10 செ.மீ. மழை பெய்துள்ளது.