முன்பதிவில்லாத பெட்டியுடன் சென்னை-பெங்களூரு டபுள் டக்கர் ரெயிலில் புதிய வசதிகள்
- வெளிநாடுகளில் உள்ள ரெயில் சேவைகளை போன்று அழகிய நவீன முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த சேர் கார் பிரிவு ரெயில் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
- குறைந்த கட்டணத்தில் சாமானிய மக்களும் டபுள் டக்கர் ரெயிலில் பயணிக்கும் வசதி கிடைத்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர்:
சென்னை-பெங்களூரு இடையே டபுள் டக்கர் ஏசி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.
சென்னை சென்ட்ரல், அரக்கோணம், காட்பாடி, ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, குப்பம், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு கண்டோன்மென்ட் பெங்களூர் சிட்டி ஜங்ஷன் ஆகிய இடங்களில் நின்று செல்கிறது.
வெளிநாடுகளில் உள்ள ரெயில் சேவைகளை போன்று அழகிய நவீன முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த சேர் கார் பிரிவு ரெயில் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
360 கிலோமீட்டர் தூரத்தை 6 மணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் டபுள் டக்கர் ரெயில் சென்றடைகிறது. பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே சாத்தியம் என மாறிய டபுள் டக்கரில் பொது பிரிவு என்று அழைக்கப்படும் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்க வேண்டும்.
ஏசி இல்லாத சேர் கார் பெட்டிகளையும் இணைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி ரெயில்வே நிர்வாகம் டபுள் டக்கர் ரெயிலில் புதிய வசதிகளை ஏற்படுத்தி உள்ளது.
அதன்படி டபுள் டக்கரில் ஏசி வசதி இல்லாத 5 சாதரண பெட்டிகள் மற்றும் முன்பதிவு இல்லாத ஒரு பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. இது தவிர சரக்குகளை கையாள ஒரு பெட்டி என மொத்தம் 15 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய வசதியுடன் இன்று முதல் சென்னை பெங்களூர் டபுள் டக்கர் ரெயில் இயக்க படுகிறது.
குறைந்த கட்டணத்தில் சாமானிய மக்களும் டபுள் டக்கர் ரெயிலில் பயணிக்கும் வசதி கிடைத்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.