தமிழ்நாடு

டெங்கு, சிக்குன்குனியாவுடன் புதுவகை காய்ச்சல் பரவுகிறது- குழந்தைகள் அதிக அளவில் பாதிப்பு

Published On 2024-10-03 08:25 GMT   |   Update On 2024-10-03 08:25 GMT
  • சிக்குன்குனியா, டெங்கு ஆகியவற்றுக்கு நேரடியான ஆன்டிபயாடிக் மருந்துகள் இல்லை.
  • குழந்தைகளுக்கு 3 அல்லது 4 நாட்களில் காய்ச்சல் குணமாகி விடுகிறது.

சென்னை:

பருவநிலை மாற்றம் ஏற்படும்போது, தொற்று நோய்கள், காய்ச்சல் வருவது வழக்கமானது. அது ஒன்றிரண்டு நாட்கள் இருக்கும். அதன் பிறகு தானாகவே சீராகிவிடும்.

ஆனால் தற்போது சளி, இருமல், காய்ச்சல் பாதிப்பு களால் தினமும் 5 ஆயிரம் பேருக்கு மேலாக ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுகிறார்கள்.

அவ்வாறு வருபவர்களில் பலர் கடுமையான காய்ச்சல் தலைவலி போன்ற டெங்கு அறிகுறிகளுடன் வருகிறார் கள். 3 நாட்கள் வரை பார்த்துவிட்டு அதன் பிறகு பரிசோதனை செய்கிறார்கள். அப்போது சிக்குன்குனியாவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிக்குன்குனியா, டெங்கு ஆகியவற்றுக்கு நேரடியான ஆன்டிபயாடிக் மருந்துகள் இல்லை. எனவே துணை மருந்துகளே கொடுக்கப்படுகிறது. காய்ச்சல் குணமடைந்த பிறகும் உடல்வலியால் முடங்கி விடுகிறார்கள்.

சிக்குன்குனியா தாக்கத்தால் முடங்கிய செல்வம் என்பவர் கூறியதாவது:-

தொடர்ந்து நான்கைந்து நாட்கள் காய்ச்சலில் அவதிப்பட்டேன். காய்ச்சல் முற்றிலுமாக குணமடைந்த பிறகும் தாங்க முடியாத உடல்வலி இருக்கிறது. ஒரு மாதமாகவே அவதிப்படுகிறேன் என்றார்.

டெங்கு மற்றும் சிக்குன் குனியா தாக்கம் அதிகமாக உள்ளது. குழந்தைகள்தான் 80 சதவீதம் வரை பாதிக்கப்படுகிறார்கள். குழந்தைகளுக்கும் 3 அல்லது 4 நாட்களில் காய்ச்சல் குணமாகி விடுகிறது. அதன் பிறகும் கடுமையான இருமல் மற்றும் சளித்தொல்லையால் அவதிப்படுகிறார்கள்.

இதுபற்றி பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

மிதமான காய்ச்சல் பாதிப்பு இருப்பவர்கள் மருத்துவ பரிசோதனை எடுக்க தேவையில்லை. அவர்கள் தனிமைபடுத்திக் கொண்டு ஓய்வெடுத்தால் போதும்.

தீவிர பாதிப்பு உடையவர்கள் முதியோர்கள், குழந்தைகள், இணை நோய் உடையவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மூச்சு திணறல், ரத்த அழுத்தம் குறைதல், சீரற்ற இதய துடிப்பு, வலிப்பு, சிறுநீர் அளவு குறைதல் ஆகிய பாதிப்புகள் இருந்தால் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டும்.

புளூ காய்ச்சல் பாதிப்பில் இருந்து தப்பிக்க ஆண்டுதோறும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இருமும்போது முகத்தை மூடிக்கொள்ள வேண்டும். பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் கட்டாயம் அணிந்து கொள்ள வேண்டும். காய்ச்சல் இருப்பவர்களோடு நெருக்கத்தை தவிர்க்க வேண்டும். பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும் என்றார்கள்.

சித்த மருத்துவத் துறையினர் கூறும்போது, மிதமான பாதிப்பு இருப்பவர்கள் மருந்துகள் எடுக்க தேவையில்லை. நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். ஆவி பிடிப்பது நல்லது. துளசி இலை, கற்பூரவல்லி இலைகளையும் சாப்பிடலாம் என்றார்கள்.

 

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இதுபற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

இது சீசன் காய்ச்சல்தான் பதற்றப்பட தேவையில்லை. அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் தேவையான மருந்து மாத்திரைகள் உள்ளன. தொடர்ச்சியாக மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News