தமிழ்நாடு

கைதான ஆசிப்

ஆசிப் நடவடிக்கைகளை 3 மாதமாக கண்காணித்த என்.ஐ.ஏ. அதிகாரிகள்- பரபரப்பான புதிய தகவல்கள்

Published On 2023-07-19 05:50 GMT   |   Update On 2023-07-19 05:50 GMT
  • ஆசிப் மற்றும் அவரது நண்பர்கள் கடந்த ஒரு மாதமாக தொட்டம்பாளையம் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.
  • என்.ஐ.ஏ. அதிகாரிகள் கொச்சினில் வைத்து ஆசிப்பிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்த தொட்டிபாளையம் பகுதியில் தங்கி இருந்த கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஆசிப் (36) என்பவரையும் அவருடன் தங்கி இருந்த அவரது நண்பரையும் நேற்று மதியம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சந்தேகத்தின் பெயரில் விசாரணைக்காக கேரளா மாநிலம் கொச்சினுக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து பரபரப்பான புதிய தகவல் கிடைத்துள்ளன. அதன் விவரம் வருமாறு:-

கேரளா மாநிலத்தில் சமீபகாலமாக ஏ.டி.எம். மையங்களில் பணம் கொள்ளையடிக்கும் சம்பவம் அதிகரித்து வந்தது. இதேபோல் ஏ.டி.எம். கார்டுகளை கொள்ளை அடிக்கும் சம்பவம் அதிகரித்து வந்தது. இவ்வாறாக திருடப்பட்ட பணம் இந்தியாவுக்கு எதிரான செயல்களில் பயன்படுத்தப்பட்டு வந்ததை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) கண்டுபிடித்தது.

இதனை அடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஏ.டி.எம் கார்டுகளை கொள்ளையடிக்கும் கும்பல் குறித்து ரகசிய விசாரணை நடத்தி வந்தனர். அப்போது ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள தொட்டம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்த கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஆசிப் (35) என்பவர் கேரளாவில் சில மாதங்களுக்கு முன்பு திருடப்பட்ட ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது.

இதனால் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த 3 மாதமாக ஆசிப் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று மதியம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் பவானிசாகர் போலீசார் உதவியுடன் தொட்டம்பாளையம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த ஆசிப் மற்றும் அவருடன் தங்கி இருந்த நபரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து கேரளா மாநிலம் கொச்சினுக்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

ஆசிப் மற்றும் அவரது நண்பர்கள் கடந்த ஒரு மாதமாக தொட்டம்பாளையம் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். ஆனால் ஆசிப் கடந்த சில மாதங்களாகவே பவானிசாகர் பகுதியில் வசித்து வருகிறார். அவர் அங்குள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தது தெரிய வந்துள்ளது.

ஆசிப் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களிடம் பேசுவது கிடையாது. ஆசிப்பை பார்க்க அவ்வப்போது சிலர் வந்து சென்றுள்ளனர். ஆசிப்புக்கு பயங்கரவாதிகளுடன் நேரடியாக தொடர்பு இல்லாவிட்டாலும் அவர்களுக்கு மறைமுகமாக உதவி செய்து இருக்கலாம் என்ற அடிப்படையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

தற்போது என்.ஐ.ஏ. அதிகாரிகள் கேரளா மாநிலம் கொச்சினில் வைத்து ஆசிப்பிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் தான் அவர் எந்த காரணத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்ற உண்மையான தகவல் தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News