தமிழ்நாடு

தமிழகத்தில் 5 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை

Published On 2024-03-27 03:23 GMT   |   Update On 2024-03-27 06:07 GMT
  • ஷேக் தாவூத் வீட்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்று முறைக்கு மேல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர்.
  • குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள சாங்கை பகுதியிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.

சென்னை:

பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் 2 பேர் சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு மாதத்துக்கும் மேலாக தங்கி இருந்து சதி திட்டம் தீட்டியது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

குண்டு வெடிப்பு குற்றவாளிகள் இருவரும் சென்னையில் பல்வேறு இடங்களுக்கு சென்றிருப்பதும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக 1000 கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்துள்ள போலீசார் இருவரும் யார் யாருடன் தொடர்பில் இருந்தார்கள்? என்பது பற்றிய தகவல்களை ரகசியமாக திரட்டி வைத்துள்ளனர்.

இதன் அடிப்படையில் இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை உள்பட 5 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னையில் மண்ணடி விநாயகர் கோவில் தெருவில் ஒரு வீட்டில் இன்று காலை என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். மண்ணடி மூட்டைக்காரன் தெருவிலும், திருவல்லிக்கேணியில் லாட்ஜ் ஒன்றிலும் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்றது.

சென்னையில் 3 இடங்களிலும் சோதனை நடத்திய அதிகாரிகள் பெங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பாக பல்வேறு தகவல்களை திரட்டி இருப்பதாக கூறப்படுகிறது. பெங்களூரு குண்டு வெடிப்பு குற்றவாளிகள் இருவரும் சென்னையில் தங்கி இருந்த போது பல்வேறு இடங்களுக்கு சென்றிருந்தனர். அதன் அடிப்படையிலேயே என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்றைய சோதனையை நடத்தி உள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் பழங்கோட்டை தெருவில் ஷேக் தாவூத் மற்றும் அவரது தந்தை வீடுகளில் இன்று காலை சுமார் 7 மணி முதல் தேசிய புலனாய்வு முகமை துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன் தலைமையில் சோதனை நடைபெற்று வருகிறது.

ஷேக் தாவூத் மீது கடந்த 2018 மற்றும் 2020 ஆகிய இரண்டு ஆண்டுகளில் ஆயுதங்கள் வைத்திருத்தல், தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தது, தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு பண பரிவர்த்தனை செய் தது, இளைஞர்களுக்கு மூளை சலவை செய்து பயிற்சி அளித்தது உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில்தான் பெங்களூரு ராமேசுவரம் கபே குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக எழுந்த சந்தேகத்தின் பெயரில் இன்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஷேக் தாவூத் மற்றும் அவரது தந்தை வீடுகளில் சோதனை நடத்தி உள்ளனர்.

மேலும் இவர் இளைஞர்களை தீவிரவாத அமைப்புகளில் சேர வலியுறுத்தியதாகவும், கடற்கரை பகுதியில் வைத்து அவர்களுக்கு தீவிரவாத பயிற்சி அளித்ததாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. ஷேக் தாவூத் வீட் டில் கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்று முறைக்கு மேல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள சாங்கை பகுதியிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். ராஜா முகமது என்பவர் வாடகைக்கு தங்கி இருந்த வீட்டில் கேரளாவை சேர்ந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையை மேற்கொண்டுள்ளனர்.

பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு உதவி செய்தவர்களை கண்டுபிடிக்கும் நோக்கத்திலேயே இந்த சோதனையும் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News