தமிழ்நாடு

தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

Published On 2024-06-30 03:43 GMT   |   Update On 2024-06-30 08:32 GMT
  • தேசிய புலனாய்வு முகமை டி.எஸ்.பி. குமரன் தலைமையிலான என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
  • புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியில் வசித்து வரும் அப்துல்கான் என்பவரது வீட்டிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

சென்னை:

நாடு முழுவதும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்களை கண்டுபிடித்து கைது செய்ய மாநில போலீசாரும் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாரும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் தமிழகத்திலும் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் தடை செய்யப்பட்ட 'ஹிஸ்ப் உத் தக்ரீர்' என்கிற பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாக யூடியூப்பில் பிரசாரம் செய்து ஆட்களை திரட்டியதாக சென்னையில் கடந்த மே மாதம் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை மாநகர காவல்துறை சார்பில் சமூக வலைதளங்களை கண்காணிப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள தனிப்படை போலீசார் சமூக வலைதளங்களை கண்காணித்தபோதுதான் சென்னையில் ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த சிலர் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக ஹமீது உசேன் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் யூடியூப் சேனல் வழியாக தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாக பேசியது தெரிய வந்ததை தொடர்ந்து சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக ஹமீது உசேனின் தந்தை அகமது மன்சூர், சகோதரர் அப்துல் ரகுமான் ஆகியோரும் அவர்களுக்கு உடந்தையாக, இருந்த மேலும் 3 பேரும் கைதானார்கள்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் சென்னையை சேர்ந்த இவர்கள் அனைவரும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஆட்களை திரட்டியது அம்பலமானது.

கடந்த மாதம் 26-ந்தேதி சென்னை போலீசார் இந்த நடவடிக்கைகளை எடுத்திருந்த நிலையில் ஒரு மாதத்துக்கு பிறகு என்.ஐ.ஏ. என்று அழைக்கப்படும் தேசிய புலனாய்வு முகமை பிரிவு அதிகாரிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை உள்பட 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னையில் ராயப்பேட்டை, முடிச்சூர் ஆகிய 2 இடங்களில் இன்று காலை 5.30 மணியில் இருந்து போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். தாம்பரம் அருகே உள்ள முடிச்சூர் மின் வாரிய காலனியில் கபீர் அகமது என்பவரது வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

தேசிய புலனாய்வு முகமை டி.எஸ்.பி. குமரன் தலைமையிலான என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். இதுபோன்று தமிழகத்தில் மற்ற மாவட்டங்களிலும் என்.ஐ.ஏ. சோதனை நடத்தி வருகிறது.

தஞ்சை குழந்தையம்மாள் நகரில் உள்ள அகமது என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ. துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் தலைமையில் 4 அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் மானாங்கோரையில் ஷேக் அலாவுதீன் என்பவரது வீட்டிலும், சாலியமங்கலத்தில் அப்துல்காதர், முஜிபுர் ரஹ்மான், காதர் மைதீன் ஆகிய 3 பேர் வீடுகளிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 5 வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

தஞ்சை மாவட்டம் சாலியமங்கலத்தை சேர்ந்த அப்துல் காதர் வீட்டில் சோதனை நடைபெற்றது. அப்போது அங்கு அப்துல் காதரின் மகன் அப்துல் ரஹ்மான் இல்லாததால் அவரது செல்போன் சிக்னல் மூலம் அவர் இருப்பிடத்தை கண்டறிந்தனர்.

அவர் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் இருப்பதை அறிந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டார்கள். அப்துல் ரஹ்மானிடமும் விசாரணை நடத்தினர். பின்பு அவரை தஞ்சைக்கு அழைத்து சென்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியில் வசித்து வரும் அப்துல்கான் என்பவரது வீட்டிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

ஈரோடு பெரியார் நகர் கருப்பண்ணசாமி வீதியில் முகமது இசாக் என்பவர் வீட்டில் கொச்சியில் இருந்து வந்திருந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

ஈரோடு பூந்துறை ரோடு, அசோக் நகர் 6-வது வீதியை சேர்ந்த சர்புதீன் என்பவர் வீட்டிலும் இன்று காலை சென்னையில் இருந்து வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் இந்த என்.ஐ.ஏ. சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சோதனை நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.


Tags:    

Similar News