தமிழ்நாடு

கேரள அரசு பஸ்சில் வந்தவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்தனர்

நிபா வைரஸ் எதிரொலி: கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு குமரி எல்லையில் காய்ச்சல் பரிசோதனை

Published On 2024-09-18 06:13 GMT   |   Update On 2024-09-18 06:13 GMT
  • மலப்புரம் மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட பகுதிகள் கட்டுப்பாடு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நிபா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

களியக்காவிளை:

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 25 வயது வாலிபர், கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அவர் நிபா வைரஸ் பாதிப்பால் இறந்திருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டதில் 175 பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அவர்களின் திரவ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.

மேலும் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட பகுதிகள் கட்டுப்பாடு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் வசிப்பவர்கள் கேரள சுகாதாரத்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்கிடையில் கேரள மாநிலத்தின் அண்டை மாநிலங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்தில் கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களிலும் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பை தொடங்கி உள்ளனர்.

 

களியக்காவிளை சோதனை சாவடியில் சுகாதாரத்துறையினர் காய்ச்சல் பரிசோதனை செய்தனர்

குமரி மாவட்டத்தை பொறுத்தவரை களியக்காவிளை, காக்கவிளை சோதனை சாவடிகளில் இன்று காய்ச்சல் பரிசோதனையில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டனர். இதற்காக சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி செய்வதற்காக 3 சுற்றுகளாக பணி பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு சுற்றுக்கு 2 பேர் பணியில் உள்ளனர். அவர்கள் கேரளாவில் இருந்து வருபவர்களை, தெர்மாமீட்டர் உதவியுடன் பரிசோதித்தனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கேரளாவில் நிபா வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் சோதனை செய்ய பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தெர்மா மீட்டர் உதவியுடன் காய்ச்சல் பரிசோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனையின்போது காய்ச்சல் இருப்பது தெரியவந்தால், அவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் என்றால், திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்.

அதேநேரம் அவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்றால், நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்சு மூலம் சிகிச்சைக்கு அனுப்பப்படுவார். இது தொடர்பான தகவல் சுகாதாரத்துறையின் தலைமைக்கு அளிக்கப்படும். குமரி மாவட்டத்தில் தனியார் ஆஸ்பத்திரிகளில் யாரேனும் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டால், அதுபற்றி சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

இதற்கிடையில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நிபா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே உள்ள காய்ச்சல் வார்டில் இந்த சிகிச்சைக்காக ஆண்கள், பெண்களுக்காக தலா 2 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Tags:    

Similar News