மதமாற்ற புகார்கள் எதுவும் இல்லை... பள்ளி விடுதியில் ஆய்வு செய்த சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பேட்டி
- மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஆளுநரிடம் அறிக்கை தாக்கல்
- இதன் பின்னணியில் மிகப்பெரிய சதி இருப்பதாக பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.
சென்னை:
சென்னை ராயப்பேட்டையில் உள்ள மோனகன் பெண்கள் மேல்நிலை பள்ளியில் மதமாற்றம், விதிமீறல்கள் நடப்பதாக புகார் எழுந்த நிலையில், மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி மற்றும் உறுப்பினர்கள் கடந்த வாரம் நேரடியாக விசாரணை நடத்தினர். பள்ளி விடுதியில் ஆய்வு செய்த அவர்கள், விடுதியில் உள்ள மாணவிகளுக்கான வசதிகள் மற்றும் குறைகளைக் கேட்டறிந்தனர். மேலும் விடுதியில் உள்ள அடிப்படை வசதிகள் எந்தளவிற்கு உள்ளது என்பதையும், உணவு தயாரிக்கும் இடம், மாணவிகளின் கழிப்பறை உள்ளிட்டவற்றையும் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மதமாற்றம் மற்றும் விதிமீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இதுதொடர்பாக அவர்கள் ஆளுநரிடம் 85 பக்கம் கொண்ட அறிக்கையையும் வழங்கினர்.
தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், இந்த பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்கும்படி, தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு காவல்துறை இயக்குநருக்கு கடிதம் எழுதி இருந்தது. விடுதியில் மாணவிகளை 24 மணி நேரத்திற்குள் அங்கிருந்து பாதுகாப்பாக வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும் எனவும்; இளம் சிறார் பாதுகாப்புச்சட்டத்தின் அடிப்படையில் தவறு செய்த பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், பெண்கள் பள்ளியில், மாநில சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் நேரடியாக விசாரணை நடத்தினார். மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பீட்டர் அல்போன்ஸ், பள்ளியில் மதமாற்றம் நடந்ததற்கான எந்தவித புகார்களும் இல்லை என்றார். மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்த அனைத்து குற்றச்சாட்டுகளும் தவறானவை என்றும், இதன் பின்னணியில் மிகப்பெரிய சதி இருப்பதாகவும் தெரிவித்தார்.
யாரோ ஒரு சிலர் மாநில ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினரை இயக்குவதாக கூறிய அவர், இந்த விவகாரம் தொடர்பாக, மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினார். இது தொடர்பாக விசாரணை அறிக்கையை முதல்வரிடம் வழங்க உள்ளதாகவும் பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.
இதற்கிடையே 9 குழந்தைகளிடம் எழுத்துப்பூர்வ புகார்களை பெற்றிருப்பதாக மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்து.