தமிழ்நாடு

கோவையில் ஹோலி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய வடமாநில தொழிலாளர்கள்

Published On 2023-03-09 07:03 GMT   |   Update On 2023-03-09 07:03 GMT
  • ஹோலி பண்டிகை கோவையில் உள்ள தொழிற்சாலைகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
  • வழக்கமாக ஆண்டுதோறும் ஹோலி பண்டிகையை கொண்டாட 50 சதவீத வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

கோவை:

கோவை மாவட்டத்தில் ஜவுளி, கட்டுமானம், வார்ப்படம், பம்ப் செட் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளன. மேலும் ஆஸ்பத்திரிகள், ஓட்டல்கள் உள்பட ஏராளமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வடமாநில தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகிறார்கள்.

இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இதனால் அச்சம் அடைந்த வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்ற வண்ணம் இருந்தனர்.

இதனால் தமிழக அரசு அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியது. வடமாநில தொழிலாளர்கள் அச்சப்பட தேவையில்லை. உங்களுக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இங்கு இல்லை. எதாவது பிரச்சினை என்றால் போலீசை தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறி செல்போன் எண்களும் வழங்கப்பட்டது. போலீசார் தொழிற்சாலைகளுக்கு நேரில் சென்று வடமாநில தொழிலாளர்களிடம் பேசி நம்பிக்கை ஊட்டினர்.

இதன் பலனாக வடமாநில தொழிலாளர்கள் கோவையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வது படிப்படியாக குறைந்தது. இந்தநிலையில் நேற்று ஹோலி பண்டிகை கோவையில் உள்ள தொழிற்சாலைகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. வடமாநில தொழிலாளர்களுடன் இணைந்து தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் வண்ணப் பொடிகளை முகத்தில் ஒருவருக்கொருவர் பூசி மகிழ்ந்தனர். ஆடல், பாடல் கொண்டாட்டத்துடன் அவர்களுக்கு அறுசுவை விருந்தும் பரிமாறப்பட்டது.

இதையொட்டி நேற்று பெரும்பாலான தொழிற்சாலைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதுபற்றி நூற்பாலை சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் தற்போது தொழிலாளர்கள் மத்தியில் நிலவிய பீதி குறைந்து விட்டது.

வழக்கமாக ஆண்டுதோறும் ஹோலி பண்டிகையை கொண்டாட 50 சதவீத வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இந்த ஆண்டு வதந்தியால் கூடுதலாக 15 சதவீதம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். சொந்த ஊர்களுக்கு சென்ற தொழிலாளர்கள் குடும்பத்தினரிடம் உண்மை நிலவரத்தை கூறி பண்டிகை முடிந்து 10 நாட்களில் கோவைக்கு வருவதாக தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் நடவடிக்கையால் தொழிற்சாலைகளில் இயல்பு நிலை திரும்பியுள்ளது என்றார்.

Tags:    

Similar News