ஒடிசா ரெயில் விபத்து எதிரொலி: ரெயில்நிலையங்களில் தண்டவாள பராமரிப்பு பணிகள் தீவிரம்
- தமிழகம் முழுவதும் பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என்று தென்னக ரெயில்வே உத்தரவிட்டு உள்ளது.
- தண்டவாளம் மற்றும் சிக்னல்களில் சிறிய அளவு குறைபாடுகள் இருந்தாலும், அவை உடனடியாக ரெயில்வே கட்டுப்பட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
கோவை:
தமிழகத்தை பொருத்தவரை ரெயில் போக்குவரத்தை பெரும்பாலான பயணிகள் அதிகம் விரும்புகின்றனர். இதில் பஸ் போக்குவரத்துடன் ஒப்பிடுகையில் கட்டணம் குறைவு. அதேநேரத்தில் வசதிகள் அதிகம் உண்டு. எனவே நிம்மதியாக, பாதுகாப்பாக பயணம் செய்து திரும்ப முடியும்.
அதுவும் தவிர பயணிகள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அதிவேகமாக செல்லக்கூடியவை. எனவே செல்ல வேண்டிய இடத்துக்கு குறைந்த நேரத்தில் செல்ல முடியும். இதன்காரணமாக தமிழகத்தில் பெரும்பாலானோர் ரெயில் பயணத்தை அதிகம் விரும்புகின்றனர். இந்த நிலையில் ஓடிசா மாநிலத்தில் நடந்த ரெயில் விபத்தில் 288 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது ரெயில் பயணத்தை விரும்பும் பயணிகளிடம் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே தமிழகம் முழுவதும் பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என்று தென்னக ரெயில்வே உத்தரவிட்டு உள்ளது.
அதன்படி சேலம் கோட்டத்தில் ரெயில்வே ஊழியர்கள் தண்டவாள பராமரிப்பு, இன்டர்லாக்கிங் சிஸ்டம், சிக்னல் இயக்கம் ஆகியவை தொடர்பாக தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தபடியாக தண்டவாளம் மற்றும் சிக்னல்களில் சிறிய அளவு குறைபாடுகள் இருந்தாலும், அவை உடனடியாக ரெயில்வே கட்டுப்பட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் ரெயில்வே அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடங்களில் உடனடியாக குறைபாடுகளை நிவர்த்தி செய்து வருகின்றனர்.
சேலம் ரெயில் நிலையத்தில் ரெயில்வே கட்டுப்பாட்டு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அங்கு 24 மணி நேரமும் ஊழியர்கள் சுழற்சி அடிப்படையில் வேலை பார்க்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
கோவை ரெயில் நிலையத்துக்கு தினமும் 70-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன. அங்கு இருந்து 20 பாசஞ்சர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.
இதுதொடர்பாக கோவை ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், சேலம் கோட்டத்தில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல் வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். கோவை ரெயில் நிலையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு, இன்டர்லாக்கிங் சிஸ்டம் மற்றும் சிக்னல் இயக்கம் ஆகியவற்றை உறுதிசெய்யும் வகையில், ஊழியர்கள் மிகவும் கவனமாக வேலை பார்த்து வருகின்றனர். தென்னக ரெயில்வேயில் பயணிகளுக்கான பாதுகாப்பான ரெயில் சேவை உறுதி செய்யப்பட்டு உள்ளது. எனவே பயணிகள் அவசியமின்றி பயப்பட தேவை இல்லை என்று தெரிவித்து உள்ளனர்.