அவதூறாக பேசிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- கலெக்டரிடம் மாணவிகள் மனு
- அரசு ஆதி திராவிடர் மாணவிகள் விடுதியில் 50 பேர் தங்கி உள்ளோம்.
- அரசு மாணவியர் விடுதியில் ஆய்வு செய்த அதிகாரி மீது மாணவிகள் புகார் கூறி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். நேற்று இவர்கள் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.
தொடர்ந்து கலெக்டர் ஜெயசீலனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
சிவகாசியில் உள்ள அரசு ஆதி திராவிடர் மாணவிகள் விடுதியில் 50 பேர் தங்கி உள்ளோம். ஒரு அறை 2 கழிவறை உள்ளது. இது போதுமானதாக இல்லை. இதனால் கடும் சிரமம் அடைந்து வருகின்றோம். இதனால் கல்லூரிக்கு உரிய நேரத்தில் செல்ல முடியவில்லை. பல நேரங்களில் தண்ணீர் மோட்டார் அடிக்கடி பழுதடைந்து விடுகிறது. இதையும் சரி செய்வதில்லை.
இந்த நிலையில் விடுதியை காலி செய்யுமாறு கட்டிட உரிமையாளர் கூறி வருகிறார். இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
கடந்த 13-ந்தேதி மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் விடுதியில் ஆய்வு செய்தார். அப்போது அவர் எங்களையும், பெற்றோரையும் தரக்குறைவாக பேசி தகாத வார்த்தைகளால் திட்டினார். விசாரணை என்ற பேரில் குற்றவாளிகளை போல் நடத்தினார்.
இதனால் எங்களுக்கு மிகுந்த மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே விடுதியில் அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மேலும் எங்களிடம் தகாத முறையில் நடந்து கொண்ட மாவட்ட ஆதி திராவிடர் நல அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அரசு மாணவியர் விடுதியில் ஆய்வு செய்த அதிகாரி மீது மாணவிகள் புகார் கூறி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பெண் அதிகாரிகளை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.