செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளை தொடர்ந்து கண்காணித்து வரும் அதிகாரிகள்
- சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நேற்று மாலை முதலே பலத்த மழை பெய்து வருகிறது.
- பூண்டி ஏரியை பொறுத்தவரை மொத்தமுள்ள 35 அடியில் 31.74 அடி வரை மட்டுமே தண்ணீர் உள்ளது.
'மிச்சாங்' புயலையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நேற்று மாலை முதலே பலத்த மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 21.23 அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 600 கன அடி தண்ணீர் வருகிறது. 3-வது நாளாக ஏரியில் இருந்து 3 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் தற்போது 19.27 அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 522 கன அடி தண்ணீர் வருகிறது. ஏரியில் இருந்து 2 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறந்து விடப்படுகிறது.
சோழவரம் ஏரியின் உயரம் 18.86 அடி அகும். இங்கு தற்போது நீர்மட்டம் 16.65 அடியாக உள்ளது. ஏரியில் இருந்து வினாடிக்கு 600 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. பூண்டி ஏரியை பொறுத்தவரை மொத்தமுள்ள 35 அடியில் 31.74 அடி வரை மட்டுமே தண்ணீர் உள்ளது. இந்த ஏரிக்கு வினாடிக்கு 370 கன அடி தண்னீர் வருகிறது.
இன்று முதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஏரிகளின் நீர்மட்டத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.