கடலூர் அருகே சென்னை பஸ் மீது ஆம்னி பஸ் மோதல்- 29 பயணிகள் படுகாயம்
- காயம் அடைந்தவர்களை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனை மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
- விபத்து காரணமாக கடலூர்-புதுச்சேரி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கடலூர்:
அரசு பஸ் மீது ஆம்னி பஸ் மோதி 29 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
சென்னையில் இருந்து காரைக்கால் நோக்கி அரசு பஸ்பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. கடலூர் அருகே உள்ள ரெட்டிச்சாவடி கரிக்கன் நகர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, அரசு பஸ் திடீரென்று சாலையின் நடுவே இருந்த தடுப்பு கட்டையில் பயங்கர சத்தத்துடன் மோதி ஏறி நின்றது.
அந்த சமயம் அரசு பஸ்சுக்கு பின்னால் வந்த தனியார் ஆம்னி பஸ் கட்டுப்பாட்டை இழந்து அரசு பஸ்சின் பின்புறம் மோதியது. அப்போது பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அலறினார்கள். இத்தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் அரசு மற்றும் ஆம்னி பஸ்சில் பயணம் செய்து காயம் அடைந்தவர்களை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனை மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் 29பேர்கள் காயம் அடைந்து உள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். விபத்தில் அரசு பஸ் முன்புறம் சிதைந்தது. ரெட்டிச்சாவடி போலீசார் உடனடியாக ஜே.சி.பி. மற்றும் கிரேன் போன்ற வாகனங்கள் மூலம் இடிப்பாட்டில் சிக்கிக் கொண்டிருந்த அரசு மற்றும் ஆம்னி பஸ்சை மீட்டு சாலையின் ஓரமாக நிறுத்தினார்கள். இந்த விபத்து காரணமாக கடலூர்-புதுச்சேரி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.