தமிழ்நாடு

சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல்

Published On 2024-08-13 09:47 GMT   |   Update On 2024-08-13 09:47 GMT
  • முத்துராமலிங்கத் தேவர் குறித்த சர்ச்சை பேச்சு புகாரில் ரேஸ்கோர்ஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
  • மூன்று நாள் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி கேட்டு போலீஸ் தரப்பில் மனு தாக்கல்.

முத்துராமலிங்கத் தேவர் குறித்த சர்ச்சை பேச்சு வழக்கில் சவுக்கு சங்கரை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி வழங்க வேண்டி போலீஸ் தரப்பில் கோவை 4-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

அப்போது சவுக்கு சங்கரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீஸ்க்கு கோவை 4-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பெண் காவலர்களை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. அதனை எதிர்த்து அவரது தாயார் மனுதாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் கடந்த வாரம் குண்டர் சட்டத்தை ரத்து செய்தது.

அதேவேளையில் நேற்று கஞ்சா வைத்திருந்ததாக போடப்பட்ட வழக்கில் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. தற்போது சென்னை சிறையில் இருந்து சவுக்கு சங்கர் மதுரை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சவுக்கு சங்கர் மீது பல வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன. ஒரு வழக்கில் ஜாமின் கிடைக்கும்போது மற்றொரு வழக்கில் கைது நடவடிக்கை பாய்கிறது. இதனால் அனைத்து மனுக்களையும் ஒன்றாக இணைத்து விசாரணை நடத்க்கோரி சவுக்கு சங்கர் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கார் பந்தயம் முடியும் வரை நான் ஜாமினில் வெளியில் வரக்கூடாது என உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால் என்மீது தினந்தோறும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறார்கள். எல்லா கைதுக்கும் காரணம் உதயநிதி ஸ்டாலின்தான் என சவுக்கு சங்கர் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பேட்டி அளித்தபோது, முத்துராமலிங்கத் தேவர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் கூறியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் சவுக்கு சங்கர் ரேஸ்கோர்ஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Tags:    

Similar News