சின்ன வெங்காயம் விலை கடும் சரிவு: ஒரு கிலோ ரூ.20-க்கு விற்பனை
- தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அறுவடை நடந்து வருவதால் அவை டன் கணக்கில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு உள்ளது.
- இனிவரும் நாட்களில் சரக்கு வரத்தை பொருத்து அவற்றின் விலையில் ஏற்ற-இறக்கங்கள் இருக்கும்.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அமைந்துள்ள காந்தி மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் சின்ன வெங்காயம் விற்பனைக்காக தினமும் கொண்டு வரப்படுகிறது. இதனை சுற்று வட்டார வியாபாரிகள் மற்றும் கேரள வியாபாரிகள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.
பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு கடந்தாண்டு பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை சின்னவெங்காயம் வரத்து அதிகமாக இருந்ததால் அந்த நேரத்தில் அவற்றின் விலை ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.35 வரை இருந்தது. பின்னர் மழைக்காலம் தொடங்கியதும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு வரத்து குறைய ஆரம்பித்தது. எனவே சின்ன வெங்காயத்தின் விலை கடந்த அக்டோபர் மாதம் கிடுகிடுவென உயர்ந்தது. இதற்கிடையே நவம்பர் மாதத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை காரணமாக அறுவடை பாதிக்கப்பட்டதால், ஒரு கிலோ சின்னவெங்காயம் ரூ.100 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் நடப்பாண்டு தொடக்கத்தில் இருந்து மழைப்பொழிவு குறைந்து உள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சின்ன வெங்காயம் அறுவடை மீண்டும் தொடங்கியது. மேலும் கர்நாடக மாநிலம் மைசூர் மற்றும் ஆந்திராவில் இருந்தும் சின்ன வெங்காயத்தின் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக பொள்ளாச்சி மார்க்கெட்டில் சின்ன வெங்காயத்தின் விலை மளமளவென குறைய தொடங்கி உள்ளது. அங்கு தற்போது மொத்த விலைக்கு ஒரு கிலோ சின்ன வெங்காயம் முதல் தரம் அதிகபட்சமாக ரூ.30-க்கும், இரண்டாவது தரம் ரூ.20-க்கும் விற்பனையாகி வருகிறது.
இதுதொடர்பாக பொள்ளாச்சி மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அறுவடை நடந்து வருவதால் அவை டன் கணக்கில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு உள்ளது. இதற்கிடையே ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக சின்ன வெங்காயத்தின் விலை கடும் சரிவை சந்தித்து உள்ளது. இனிவரும் நாட்களில் சரக்கு வரத்தை பொருத்து அவற்றின் விலையில் ஏற்ற-இறக்கங்கள் இருக்கும் என தெரிவித்து உள்ளனர்.