தமிழ்நாடு

பாத பூஜை நமது கலாச்சாரம்.. அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுக்கு தமிழிசை எதிர்ப்பு

Published On 2024-09-08 03:47 GMT   |   Update On 2024-09-08 03:47 GMT
  • ஆசிரியர்கள் பாதத்தை கழுவ வைப்பது எல்லாம் என்ன மாதிரியான கலாச்சாரம் என்று தெரியவில்லை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
  • பாத பூஜை நமது கலாச்சாரம் என்பதால் அனுமதிக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தனியார் பள்ளியில் ஆசிரியர் தின கொண்டாட்டத்தில் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பாதபூஜை செய்தது கண்டிக்கத்தக்க்து என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியர் தினத்தையொட்டி மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பாதபூஜை செய்தனர். இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியது.

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "ஆசிரியர்கள் பாதத்தை கழுவ வைப்பது எல்லாம் என்ன மாதிரியான கலாச்சாரம் என்று தெரியவில்லை. ஆசிரியர்களை கொண்டாட வேண்டும். நாங்கள் கொண்டாடும் வகையில் யாரும் கொண்டாடியதில்லை. ஆனால், அவர்களின் பாதங்களை கழுவுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார், அதோடு, இனி இதுபோன்று நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

இந்நிலையில், பாத பூஜை நமது கலாச்சாரம் என்பதால் அனுமதிக்க வேண்டும் என்று பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "ஆன்மிகம் இல்லாத அரசியல் இப்போது செய்யமுடியாது. பள்ளிக்கல்வித்துறையில் பல குழப்பங்கள் உள்ளது. அசோக் நகர் மகளிர் பள்ளியில் தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை நான் கண்டிக்கிறேன். ஆசிரியர்களை பலிகடா ஆக்குகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News