தமிழ்நாடு

சரணடையும் நாளிலேயே ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலிக்க கோரி திமுக எம்.எல்.ஏ. மகன் மனு

Published On 2024-01-24 06:55 GMT   |   Update On 2024-01-24 10:34 GMT
  • திமுக எம்.எல்.ஏ. மருமகள் மெர்லினாவின் தாய், தந்தையிடம் காவல் உதவி ஆணையர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.
  • பெங்களூரு சென்றுள்ள தனிப்படை போலீசார் அவர்களது உறவினர் வீடுகளிலும் இரண்டு பேர் குறித்தும் விசாரணை நடத்தினர்.

சென்னை:

பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள், தனது வீட்டில் சிறுமி ஒருவரை வீட்டு வேலைக்காக அழைத்துச் சென்று கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக திருவான்மியூர் மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.சி., எஸ்.டி. உட்பட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் தலைமறைவாகினர். இதையடுத்து இருவரையும் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து திமுக எம்.எல்.ஏ. மருமகள் மெர்லினாவின் தாய், தந்தையிடம் காவல் உதவி ஆணையர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. மெர்லினா எங்கே இருக்கிறார் என்பது குறித்தும், சிறுமியை தாக்கிய சம்பவம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர்.

தலைமறைவாக உள்ள ஆண்ட்ரோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினாவின் செல்போன் சிக்னல் மூலம் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

பெங்களூரு சென்றுள்ள தனிப்படை போலீசார் அவர்களது உறவினர் வீடுகளிலும் இரண்டு பேர் குறித்தும் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ. மகன், மருமகள் அளித்த மனுவில், சரணடையும் நாளிலேயே ஜாமின் மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தனர்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், திமுக எம்.எல்.ஏ.வின் மகன், மருமகள் சரணடையும் நாளிலேயே ஜாமின் வழங்குவது குறித்து சட்டத்திற்குட்பட்டு பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை முதன்மை அமர்விற்கு உத்தரவிட்டனர்.

மேலும் அனைத்து தரப்பிற்கும் போதிய வாய்ப்பளித்து முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

Tags:    

Similar News