தமிழ்நாடு

தி.மு.க. எம்.எல்.ஏ. மகன், மருமகள் ஜாமின் மனு மீதான உத்தரவு பிப்.6-ந்தேதிக்கு தள்ளிவைப்பு

Published On 2024-02-02 07:38 GMT   |   Update On 2024-02-02 10:34 GMT
  • சமூக ஊடகங்களால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக போலீசார் அவசர கதியில் செயல்பட்டுள்ளனர்.
  • பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார் தொடர்பாக இன்னும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை:

சென்னை திருவான்மியூர் சவுத் அவென்யூ பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பல்லாவரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இ.கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன் வீட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் மாத சம்பளம் அடிப்படையில் வீட்டு வேலைக்கு சேர்ந்தார்.

ஆனால் அந்த பெண்ணுக்கு பேசியபடி சம்பளம் கொடுக்காமல் கணவன், மனைவி இருவரும் சேர்ந்து கட்டாயப்படுத்தி வேலை வாங்கியதுடன், அவரை அடித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் திருவான்மியூர் அனைத்து மகளிர் போலீசார் ஆண்ட்ரோ மதிவாணன், அவருடைய மனைவி மெர்லினா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து தலைமறைவான அவர்களை ஆந்திராவில் கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் ஆண்ட்ரோ மதிவாணன், மெர்லினா ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கின் விசாரணை சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் இன்று நடைபெற்றது.

மனுதாரர்கள் தரப்பில், சமூக ஊடகங்களால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக போலீசார் அவசர கதியில் செயல்பட்டுள்ளனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் பக்கம் பெரிய நபர்கள் இருந்திருந்தால் எப்படி இருவரும் கைது செய்யப்பட்டிருப்பார்கள்? இந்த விவகாரத்தில் எஸ்.சி., எஸ்.டி. சட்டப்பிரிவு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட பெண் தரப்பில், குற்றம்சாட்டப்பட்டவர்களின் பின்புலத்தில் முக்கிய நபர்கள் இருக்கின்றனர். இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் உண்மைகள் தெரிய வரும் என்று விவாதிக்கப்பட்டது. போக்சோ பிரிவிலும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார் தொடர்பாக இன்னும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மகன் மற்றும் மருமகள் ஜாமின் மனு மீதான உத்தரவை பிப். 6-ந்தேதிக்கு தள்ளி வைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags:    

Similar News