பணிப்பெண்ணை துன்புறுத்திய வழக்கு: திமுக எம்எல்ஏ தொடர்பான வழக்கு விசாரணை தள்ளிவைப்பு
- ஐகோர்ட்டு உத்தரவுப்படி இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
- குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக் கொள்வதற்காக ஆன்டோ மதிவாணன் தம்பதி நேரில் ஆஜராக கோர்ட்டு உத்தரவிட்டது.
சென்னை:
சென்னை பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆன்டோ மதிவாணன் (வயது 35). இவர், தனது மனைவி மெர்லினாவுடன் (32) திருவான்மியூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இருவரும் தன்னை துன்புறுத்தியதாக வீட்டு பணிப்பெண் அளித்த புகாரின் பேரில் அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆந்திராவில் தலைமறைவாக இருந்த இருவரையும், கடந்த ஜனவரி மாதம் தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதன்பின்பு ஐகோர்ட்டு உத்தரவுப்படி இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் ஆன்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினா ஆகியோருக்கு எதிராக போலீசார் சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக் கொள்வதற்காக ஆன்டோ மதிவாணன் தம்பதி நேரில் ஆஜராக கோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்படி நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் ஆன்டோ மதிவாணன் தம்பதி நேரில் ஆஜராகினர். அவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணையை வருகிற 22-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.