19 ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடங்கள்- மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
- கால்நடை தீவன தொழிற்சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
- ஊராட்சித் துறை இயக்குநர் பா.பொன்னையா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் சிவகங்கை, தேனி, திருவாரூர், கள்ளக்குறிச்சி, மதுரை, ராமநாதபுரம், திருவண்ணாமலை, கன்னியாகுமரி, திருச்சிராப்பள்ளி மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் 71 கோடியே 94 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 19 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்களை திறந்து வைத்தார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 35 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான 391 வாகனங்களை வழங்கிடும் அடையாளமாக 10 வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சிவகங்கை மாவட்டம் கண்ணன்குடி, மானாமதுரை, சிங்கம்புணரி, திருப்புவனம் மற்றும் திருப்பத்தூர், தேனி மாவட்டம் தேனி மற்றும் கம்பம், கொரடாச்சேரி, தியாகதுருகம் மற்றும் ரிஷிவந்தியம், மேலூர், ராமநாதபுரம், துரிஞ்சாபுரம், திருவண்ணாமலை, பெரணமல்லூர், போளூர், தக்கலை, வையம்பட்டி, காட்பாடி ஆகிய இடங்களில் 71 கோடியே 94 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 19 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்கள் இதில் அடங்கும்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், இ.பெரியசாமி, எ.வ. வேலு, டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் பா.பொன்னையா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் திருநங்கைகளின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவை புரிந்ததற்கான 2024-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதினை கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை சந்தியா தேவிக்கு வழங்கினார். அவருக்கு ரூ. 1 லட்சம் காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் (ஆவின்) சார்பில் 10 கோடியே 61 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 50,000 லிட்டர் பால் உற்பத்தித் திறன் கொண்ட 2 பால் பண்ணைகள், 5,000 லிட்டர் திறன் கொண்ட தயிர் மற்றும் மோர் தயாரிக்கும் ஆலை மற்றும் ஆய்வகக் கட்டிடம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, கடலூர் மாவட்டம், ம. பொடையூரில் 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கால்நடை தீவன தொழிற்சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
இதில் காக்களூர் பால் பண்ணையில் 3 கோடியே 57 லட்சம் ரூபாய் செலவில் நாளொன்றுக்கு 5,000 லிட்டர் திறன் கொண்ட தயிர் மற்றும் மோர் தயாரிக்கும் ஆலை, மாதவரத்தில் 1 கோடியே 89 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நோய்க் கிருமிகளை கண்டறியும் மேம்படுத்தப்பட்ட ஆய்வகம் அடங்கும்.