தமிழ்நாடு

சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க 3 இடங்களில் பார்க்கிங் வசதி

Published On 2024-02-25 07:50 GMT   |   Update On 2024-02-25 07:51 GMT
  • கடந்த ஒரு வாரமாக மாநகரின் முக்கிய சாலைகள், கடைவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
  • கே.என்.கே சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் ஓரிரு நாளில் அகற்றப்படும்.

ஈரோடு:

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட கடை வீதிகள் மற்றும் முக்கிய சாலைகளில் செயல்படும் வணிக நிறுவனங்கள், கடைகளில் வாகன பார்க்கிங் வசதி இல்லாமல் உள்ளது. இதனால் இங்கு வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்தி செல்கின்றனர். இதனால் சாலைகளில் பிற வாகனங்கள் செல்ல இடையூறு ஏற்பட்டு வாகன நெரிசலும் ஏற்பட்டு வந்தது.

மேலும் சாலையோர ஆக்கிரமிப்புகளால் பிரச்சனை நீடித்து வந்தது. இந்நிலையில் ஈரோடு கலெக்டர், மாநகராட்சி ஆணையாளர், எஸ்.பி ஆகியோர் உத்தரவின் பேரில் கடந்த ஒரு வாரமாக மாநகரின் முக்கிய சாலைகள், கடைவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

இதன் காரணமாக தற்போது சாலைகள் ஆக்கிரமிப்பின்றி விஸ்தாரமாக காட்சியளிக்கிறது. மாநகரில் சாலை ஆக்கிரமிப்புகளை தடுக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், முக்கிய சாலைகள், கடைவீதி சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க வாகன பார்க்கிங் வசதி செய்து தரப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து ஈரோடு வடக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரண்யா கூறியதாவது:-ஈரோடு மாநகரில் சாலை ஆக்கிரமிப்புகள் உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் அகற்றப்பட்டு வருகிறது. மேலும் கே.என்.கே சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் ஓரிரு நாளில் அகற்றப்படும்.

முக்கியசாலைகள், கடைவீதிகளில் சாலை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் வாகனங்களை நிறுத்தி செல்வதாக புகார் வந்தது. அந்த இடங்களில் நோ பார்க்கிங் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு போக்குவரத்து விதிகளின்படி அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.

சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க முக்கியமான சாலைகள், கடைவீதிகளில் 3 இடங்களில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்கு மாநகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News