தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் ஓய்கிறது
- எம்.எல்.ஏ. மரணம் காரணமாக விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி காலியாக உள்ளது என்ற அறிவிப்பு, தேர்தல் கமிஷனுக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டுவிட்டது.
- அமைதி பிரசாரம் உள்பட எந்த வகையான பிரசாரத்துக்கும் அனுமதி இல்லை.
சென்னை:
சென்னை தலைமைச்செயலகத்தில் சத்யபிரதா சாகு நிருபர்களிடம் கூறியதாவது:-
குறைவான எண்ணிக்கையில் அரசு அலுவலர்கள் உள்ள மாவட்டங்களில், வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் 2 அலுவலர்களை மட்டும் பணி அமர்த்த தேர்தல் கமிஷன் சிறப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்திலும், விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்திலும் உள்ள வாக்குச்சாவடிகளில் ஒரு தலைமை அலுவலர் மற்றும் 2 அலுவலர்கள் பணியில் இருப்பார்கள். கூடுதல் எண்ணிக்கையில் அரசு ஊழியர்கள் இருக்கும் மற்ற மாவட்டங்களில் கூடுதலாக ஒரு அலுவலர் பணியாற்றுவார்.
வாக்குப்பதிவு அன்று ஏதாவது தனியார் நிறுவனம் சம்பளத்துடன் விடுமுறை அளிக்கவில்லை என்றால் அந்தந்த மாவட்ட எஸ்.டி.டி. 'கோடை' சேர்த்து 1950 என்ற எண்ணுக்கு போன் செய்து புகார் அளிக்கலாம்.
எம்.எல்.ஏ. மரணம் காரணமாக விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி காலியாக உள்ளது என்ற அறிவிப்பு, தேர்தல் கமிஷனுக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டுவிட்டது. அங்கு ஜூன் 4-ந்தேதிக்கு முன்பாக இடைத்தேர்தல் நடத்த முடியுமா? என்றால், தேர்தல் கமிஷன்தான் அதில் முடிவெடுக்கும். ஒருவேளை விக்கிரவாண்டி தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டாலும், அதை எதிர்கொள்ள தேவையான வாக்கு எந்திரங்கள் தயாராக உள்ளன. நாங்கள் எல்லாவற்றுக்கும் தயாராகவே இருக்கிறோம்.
பாராளுமன்ற தொகுதிகளிலும், விளவங்கோடு சட்டசபை தொகுதியிலும் வரும் 19-ந்தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். எனவே தேர்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. அதன்பிறகு அமைதி பிரசாரம் உள்பட எந்த வகையான பிரசாரத்துக்கும் அனுமதி இல்லை. எனவே தொகுதிக்கு தொடர்பில்லாதவர்கள் 17-ந்தேதி மாலை 6 மணிக்கு மேல் தொகுதியை விட்டு வெளியேறிவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.