தமிழ்நாடு

பாராளுமன்ற தேர்தல்- போட்டியும் இல்லை, ஆதரவும் இல்லை

Published On 2024-02-02 08:38 GMT   |   Update On 2024-02-02 09:04 GMT
  • பாராளுமன்ற தேர்தல் குறித்து மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களுடன் விஜய் கடந்த 25-ந்தேதி ஆலோசனை நடத்தினார்.
  • நடிகர் விஜய் தொடங்க உள்ள அரசியல் கட்சியின் பெயர் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய், விஜய் மக்கள் இயக்கம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிகராக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அன்னதானம், குழந்தைகளுக்கு சத்தான உணவுகள், உலக பட்டினி தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் ஏழைகளுக்கு மதிய உணவு வழங்கி விஜய் ரசிகர்கள் மக்கள் சேவையில் இறங்கினர். அரசியல் கட்சிகளில் இருப்பது போல் இயக்கத்தில் பல அணிகளும் உருவாக்கப்பட்டு மக்கள் பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

சமீபத்தில் புயல் மழையால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதை தொடர்ந்து விஜய் நேரில் சென்று பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவித்தொகை மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.

இந்நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்து மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களுடன் விஜய் கடந்த 25-ந்தேதி ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில், பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடலாமா அல்லது வேறு கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்கலாமா என ஆலோசனை நடத்தப்பட்டது. பாராளுமன்றத்தேர்தலை தொடர்ந்து தொகுதி முழுவதும் பூத் கமிட்டி அமைப்பது பற்றியும் விஜய் ஆலோசனை வழங்கினார்.

நடிகர் விஜய் தொடங்க உள்ள அரசியல் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கடந்த ஓராண்டாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு விரைவில் விஜயிடம் இருந்து கிரீன் சிக்னல் கிடைக்கும் என்றும் கட்சி கொடி, சின்னம் மற்றும் வண்ணங்கள் முடிவு செய்யும் பணி தொடங்கியதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் நடிகர் விஜய் தொடங்கி உள்ள அரசியல் கட்சியின் பெயர் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தனது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளார்.

வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் நாம் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் நம் ஆதரவு இல்லை என்றும் பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News