தமிழ்நாடு

கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தின் கதவுகள் திறக்காததால் 1½ மணி நேரம் தவித்த பயணிகள்

Published On 2023-03-08 06:35 GMT   |   Update On 2023-03-08 06:35 GMT
  • பயணிகள் விமானத்திலிருந்து இறங்குவதற்கு முற்பட்டபோது விமானத்தின் கதவு திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.
  • உடனடியாக தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

திருச்சி:

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு 10.10 மணிக்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா விமானம் 158 பயணிகளுடன் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது. அப்போது பயணிகள் விமானத்திலிருந்து இறங்குவதற்கு முற்பட்டபோது விமானத்தின் கதவு திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் 30 நிமிடம் பயணிகள் விமானத்திற்கு உள்ளேயே தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். பின்னர் உடனடியாக தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு விமானத்தின் கதவை திறந்தனர்.

இதையடுத்து நள்ளிரவு சுமார் 11.30 மணியளவில் விமானத்தின் கதவு திறக்கப்பட்டது. இதனால் நிம்மதி பெருமூச்சுவிட்ட பயணிகள் கீழே இறங்கி புறப்பட்டு சென்றனர். மீண்டும் 178 பயணிகளுடன் அந்த விமானம் கோலாலம்பூருக்கு இரவு 10.30 மணிக்கு பதிலாக நள்ளிரவு 1.30 மணிக்கு புறப்பட்டு சென்றது.

Tags:    

Similar News