பேனா நினைவு சின்னம்: நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது மத்திய அரசு
- மத்திய அரசின் முதற்கட்ட அனுமதி கிடைத்ததை தொடர்ந்து அண்மையில் பொதுமக்களிடம் தமிழக அரசு கருத்து கேட்பு கூட்டம் நடத்தியது.
- அறிக்கையின் அடிப்படையில் பேனா நினைவு சின்னத்துக்கு ஒப்புதல் வழங்க தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்தது.
சென்னை:
முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி வயது முதிர்வு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க நடுக்கடலிலும் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட 'பேனா' நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.
இந்த நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அனுமதி பெற விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. இதில் மத்திய அரசின் முதற்கட்ட அனுமதி கிடைத்ததை தொடர்ந்து அண்மையில் பொதுமக்களிடம் தமிழக அரசு கருத்து கேட்பு கூட்டம் நடத்தியது.
இதைத்தொடர்ந்து பேனா நினைவு சின்னம் அமைக்க ஒப்புதல் வழங்க கோரி மத்திய அரசுக்கு தமிழக பொதுப்பணித்துறை கடிதம் அனுப்பியுள்ளது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை, மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழுவிடம் தமிழக பொதுப்பணித்துறை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் பேனா நினைவு சின்னத்துக்கு ஒப்புதல் வழங்க தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்தது. இந்த நிலையில், பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு அனுமதி கொடுத்துள்ளது.
இதில் மத்திய அரசின் அனுமதியை தொடர்ந்து விரைவில் கடலோர ஒழுங்கு முறை மண்டலமும் அனுமதி கொடுக்க வாய்ப்பு உள்ளது. பேனா சின்னம் அமைப்பதற்கு முன் ஐ.என்.எஸ் அடையாறு கடற்படை தளத்தில் தடையில்லா சான்று பெற வேண்டும்.
கட்டுமான பணிகளுக்காக எந்த ஒரு நிலையிலும் நிலத்தடி நீரை பயன்படுத்தக் கூடாது. திட்டத்தை செயல்படுத்தும் போது நிபுணர் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். கடலோர பாதுகாப்பு மண்டல விதிகளுக்கு உட்பட்டு கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் உள்பட 15 நிபந்தனைகளையும் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு விதித்துள்ளது.