தமிழ்நாடு

எரிகல் விழுந்த பள்ளத்தை பொதுமக்கள் பார்வையிட்ட காட்சி.

எரிகல் விழுந்த 5 அடி பள்ளத்தில் அனல் பறக்கும் வெப்பம்- செல்பி எடுக்க குவியும் மக்கள்

Published On 2024-05-29 07:31 GMT   |   Update On 2024-05-29 07:31 GMT
  • அதிகாரிகள் பள்ளத்தில் இருந்த மண் மாதிரிகளை எடுத்து காவலூர் பகுதியில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
  • எரிக்கல் விழுந்த பகுதியில் மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

ஜோலார்பேட்டை:

திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே அச்சமங்கலம் சொட்டை கவுண்டர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது நிலத்தில் கடந்த வாரம் வெடி விபத்து ஏற்பட்டது போன்ற பயங்கர சத்தம் கேட்டது.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது நிலத்தில் 5 அடி ஆழம், 2 அடி அகலத்தில் பள்ளம் ஏற்பட்டிருந்தது. அந்த பள்ளத்தில் நெருப்பு மற்றும் சாம்பல் போல் மண் காணப்பட்டது.

மேலும் பள்ளத்தில் இருந்து அனல் பறக்கும் வெப்பம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் வானில் இருந்து ஏதேனும் மர்ம பொருள் விழுந்ததா? என்று அச்சம் அடைந்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கலெக்டர் தர்ப்பகராஜ், தாசில்தார் அனந்தகிருஷ்ணன் மற்றும் வருவாய் துறையினர் அந்த இடத்துக்கு வந்து பள்ளத்தை பார்வையிட்டனர்.

அதிகாரிகள் பள்ளத்தில் இருந்த மண் மாதிரிகளை எடுத்து காவலூர் பகுதியில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே வேலூர் மாவட்ட அறிவியல் மைய அறிவியல் அலுவலர் (பொறுப்பு) ரவிக்குமார் தலைமையிலான குழுவினர் அந்த இடத்துக்கு சென்றனர். பள்ளத்தில் இருந்து எரிந்த சாம்பல் மற்றும் மண் மாதிரிகளை சேகரித்தனர்.

வானில் இருந்து எரிகல் விழுந்ததால் பள்ளம் ஏற்பட்டிருக்கலாம்.

இங்கு விழுந்த எரிகல் அளவு ஒரு மீட்டர் வரை இருக்கும். இங்கு சேகரிக்கப்பட்ட மாதிரிகள் சென்னை நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று காலை முதல் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் எரிகல் விழுந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

அவர்கள் அந்த இடத்தை புகைப்படம் எடுத்தும், எரிகல் விழுந்த இடம் அருகே செல்பி எடுத்தும் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதைப்பார்த்து பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வரத்தொடங்கி உள்ளனர்.

இதனால் எரிக்கல் விழுந்த பகுதியில் மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

Tags:    

Similar News