கிளாம்பாக்கத்தில் பரபரப்பு: அரசு பஸ்களை சிறைபிடித்து போராட்டம் நடத்திய பொதுமக்கள்
- கிளாம்பாக்கத்தில் அரசு பஸ்களை சிறைபிடித்து பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- பயணிகளிடம் போலீசார், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சென்னை:
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கத்தில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு பஸ்களும், ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இரவில் அரசு பஸ்களை சிறைபிடித்து பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி செல்ல போதிய பஸ்கள் இல்லாததால் பல மணி நேரமாக காத்திருப்பதாக பயணிகள் புகார் தெரிவித்தனர். மேலும், கிளாம்பாக்கம் வரும் பஸ்களில் இருக்கைகள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு இருந்ததால் ஆத்திரம் அடைந்த பயணிகள் பஸ்களை சிறைபிடித்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுப்பதாக பயணிகளிடம் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.