452 இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி: மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திடீர் ஆய்வு
- இந்து அமைப்புகள் சார்பில் ஆண்டுதோறும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவது வழக்கம்.
- குறைந்த அளவிலான உயரம் கொண்ட விநாயகர் சிலைகளை வைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
திருவள்ளூர்:
விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் ஆண்டுதோறும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டும் திருவள்ளூரில் 63 இடங்களிலும், திருத்தணி 98, ஊத்துக்கோட்டை 204, கும்மிடிப்பூண்டி 67, பொன்னேரி 20 உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 452 சிலை வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டு சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத வகையில் விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும், குறைந்த அளவிலான உயரம் கொண்ட விநாயகர் சிலைகளை வைப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு தெரிவித்து உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் காக்களூர், திருத்தணி, வெங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் விநாயகர் சிலை செய்வதற்கான கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து பல்வேறு வடிவங்களில், பல்வேறு வண்ணங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு, ஆர்டர் கொடுத்தவர்களுக்கு கொடுக்கும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் திருவள்ளூர் - ஆவடி சாலையில் காக்களூர் பகுதியில் உள்ள விநாயகர் சிலை தயாரிக்கும் இடத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது விநாயகர் சிலையில் அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருட்கள் மற்றும் ரசாயன பொருட்களைக் கொண்டு விநாயகர் சிலை செய்யப்படுகின்றனவா என ஆய்வு செய்தனர்.