தமிழ்நாடு

தமிழகத்தில் 6 ஆயிரம் மருத்துவ இடங்களுக்கு கலந்தாய்வு நடத்த திட்டம்

Published On 2023-06-21 09:18 GMT   |   Update On 2023-06-21 09:44 GMT
  • 500 மருத்துவ இடங்கள் இந்த வருடம் கூடுதலாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • புதுக்கோட்டையில் புதிய அரசு பல் மருத்துவமனை 50 பி.டி.எஸ். இடங்களுடன் இந்த ஆண்டு தொடங்கப்படுகிறது.

சென்னை:

தமிழ்நாட்டில் 26 அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் 15 தனியார் மருத்துவ கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர சென்னையில் ஒரே ஒரு அரசு பல் மருத்துவக்கல்லூரியும் இயங்கி வருகிறது.

இதில் உள்ள எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ இடங்களுக்கு நீட் கட் ஆப் மார்க் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

500 மருத்துவ இடங்கள் இந்த வருடம் கூடுதலாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 50 எம்.பி.பி.எஸ். இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

புதுக்கோட்டையில் புதிய அரசு பல் மருத்துவமனை 50 பி.டி.எஸ். இடங்களுடன் இந்த ஆண்டு தொடங்கப்படுகிறது. மேலும் 2 புதிய தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான இடங்கள் அதிகரிக்கிறது.

அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மட்டும் 5350 வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர தனியார் மருத்துவ கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் ஆயிரத்திற்கும் மேலான இடங்கள் உள்ளன. இந்த இடங்களும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது.

அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படுவதால் இந்த ஆண்டும் 500-க்கு மேலான அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மருத்துவ கலந்தாய்விற்கான விண்ணப்ப பதிவு நடைமுறை ஓரிரு நாட்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னர் மதிப்பெண் வாரியாக ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு கலந்தாய்வு நடத்தப்படும். ஜூலை மாதத்திற்குள் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டு ஆகஸ்ட் முதல் வாரத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News