தமிழ்நாடு

பிரதமர் மோடி 2-வது நாளாக தியானம்: விவேகானந்தர் மண்டபம் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

Published On 2024-05-31 04:39 GMT   |   Update On 2024-05-31 04:39 GMT
  • பகவதி அம்மனின் பாதம் பதித்த ஸ்ரீ பாதம் மண்டபத்தில் தரிசனம் செய்தார்.
  • மோடி இன்று அதிகாலை 5 மணிக்கு தியான மண்டபத்தை விட்டு வெளியே வந்தார்.

கன்னியாகுமரி:

பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் பிரசாரம் நிறைவடைந்ததும் பிரதமர் மோடி ஆன்மீக தலங்களுக்கு சென்று தியானம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த 2014, 2019-ம் ஆண்டுகளில் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்ததும் பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டார்.

தற்போது மக்களவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரசாரம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தியானம் செய்வதற்காக நேற்று மாலை கன்னியாகுமரி வந்தார். இதற்காக அவர் தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு வாரணாசியில் இருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார்.

திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி வந்து சேர்ந்த பிரதமர் மோடி, அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். பின்னர் குண்டு துளைக்காத காரில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பகவதி அம்மன் படம் வழங்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு பூம்புகார் தனி படகு மூலம் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்றார். அங்கு பகவதி அம்மனின் பாதம் பதித்த ஸ்ரீ பாதம் மண்டபத்தில் தரிசனம் செய்தார்.

மேலும் விவேகானந்தரின் குருவான ராமகிருஷ்ண பரமஹம்சர், அன்னை சாரதா தேவி ஆகியோரின் உருவப்படங்களை வணங்கினார். விவேகானந்தரின் முழு உருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்பு விவேகானந்தர் மண்டபத்தில் நின்றபடி 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை பார்த்து ரசித்தார். 

அதன்பிறகு தியான மண்டபத்திற்கு சென்று பிரதமர் மோடி தியானத்தை தொடங்கினார். இரவு முழுவதும் தியான மண்டபத்தில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். அவர் இன்று அதிகாலை வரை அவர் தொடர்ந்து தியானம் செய்தபடி இருந்தார்.

மோடி இன்று அதிகாலை 5 மணிக்கு தியான மண்டபத்தை விட்டு வெளியே வந்தார். விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து காலை 5:55 மணிக்கு சூரிய உதய காட்சிகளை கண்டு ரசித்தார். அங்கிருந்து கடல் அழகையும் ரசித்து பார்த்தார்.

அதன்பிறகு ஸ்ரீபாத மண்டபத்திற்கு சென்ற பிரதமர் மோடி, 10 நிமிடம் அங்கு அமர்ந்திருந்தார். பின்பு காலை 7:15 மணிக்கு மீண்டும் தியான மண்டபத்திற்குள் சென்று தனது இரண்டாவது நாள் தியானத்தை தொடங்கினார்.

பிரதமர் மோடி விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொண்டு வருவதையடுத்து அங்கு சுற்றுலா பணிகள் நேற்று மதியத்துக்கு பிறகு அனுமதிக்கப்படவில்லை. ஆனால் இன்று காலை விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களின் முகவரி உட்பட பல்வேறு தகவல்களை போலீசார் பதிவு செய்து பலத்த சோதனைக்கு பிறகு விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்ல அனுமதித்தனர். பயணிகள் சென்ற படகிலும் ஏராளமான போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் தியானம் மேற்கொண்டுள்ள பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. மற்ற இடங்களுக்கு வழக்கம் போல் செல்ல மட்டும் அனுமதிக்கப்பட்டார்கள்.

பிரதமர் தியானம் செய்யும் மண்டப பகுதிக்கு யாரும் செல்ல முடியாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அங்கு போலீசார் மட்டுமின்றி, கமாண்டோ வீரர்களும் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

பிரதமர் மோடி நாளை (1-ந் தேதி) மாலை வரை விவேகானந்தர் மண்டபத்திலேயே தங்கி தியானம் செய்கிறார். 3 நாட்கள் தியானத்தை முடித்துக்கொண்டு நாளை மாலை விவேகானந்தர் மண்ட பத்திலிருந்து தனி படகு மூலமாக புறப்பட்டு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு திரும்புகிறார்.

பின்னர் அங்கிருந்து காரில் அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிகாப்டர் தளத்திற்கு சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார். திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

பிரதமர் மோடி வருகையையடுத்து குமரி மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

காந்தி மண்டபம், விவேகானந்தர் மண்டபம் உட்பட அனைத்து பகுதிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், மத்திய பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் கடல் பகுதியில் கப்பற்படை கப்பலும் நிறுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

கடலோர காவல்படையினர் ரோந்து கப்பல்களில் விவேகானந்தர் பாறையை சுற்றியுள்ள பகுதிகள் மட்டுமின்றி, குமரி கடல் பகுதி முழுவதும் நவீன படகுகளில் ரோந்து சுற்றி வந்து கண்காணித்து வருகின்றனர். கடலோர காவல் படை போலீசார் கன்னியாகுமரி கடலோர பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் போலீஸ் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடற்கரை கிராம பகுதி சோதனை சாவடிகள் மட்டுமின்றி மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Tags:    

Similar News