அரசுப்பேருந்துகளில் காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதி இல்லை
- நாங்குநேரி அருகே டிக்கெட் எடுக்க மறுத்து காவலர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
- வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல் துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும்.
நெல்லை:
தமிழக அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் காவல் துறையினர் பெரும்பான்மையானோர் இலவச பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
பணி நிமித்தம் மட்டுமில்லாது தங்கள் சொந்த வேலைக்காக செல்லும்போதும் சில காவலர்கள் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்கின்றனர். சில நேரங்களில் இது தொடர்பாக பேருந்து நடத்துனருக்கும் காவலர்களுக்கும் வாக்குவாதங்கள் ஏற்படும்.
இந்நிலையில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே டிக்கெட் எடுக்க மறுத்து காவலர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போக்குவரத்து துறை விளக்கம் அளித்துள்ளது. அதில்,
* அரசுப்பேருந்துகளில் காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதி இல்லை.
* வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல் துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும். மற்ற அனைத்து நேரத்திலும் காவலர்கள் பேருந்துகளில் பயணிக்கும் பொழுது கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும்.
* நாங்குநேரியில் பேருந்து நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.