தமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் வழக்கு- ஆன்லைன் மூலம் சாட்சி விசாரணை தொடக்கம்

Published On 2023-02-25 09:01 GMT   |   Update On 2023-02-25 09:01 GMT
  • கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அதற்காக ஒதுக்கப்பட்ட தனி அறையில், மகளிர் கோர்ட்டு நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில் சாட்சி விசாரணை தொடங்கியது.
  • விசாரணையின்போது குற்றம்சாட்டப்பட்டவர்கள் கோர்ட்டிற்கு அழைத்து வரப்படவில்லை.

கோவை:

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி மற்றும் பெண்களை ஒரு கும்பல் பலாத்காரம் செய்து, ஆபாசமாக வீடியோ எடுத்து துன்புறுத்தி வந்தது.

இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளத்தில் கடந்த 2019-ம் ஆண்டில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்த நிலையில் வழக்கானது சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் பொள்ளாச்சியில் முகாமிட்டு, விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, இந்த வழக்கில் தொடர்புடையதாக திருநாவுக்கரசு(25), சபரிராஜன்(25), சதீஷ்(28), வசந்தகுமார்(27), மணிவண்ணன்(28), ஹெரன்பால்(29), பாபு(27), அருளானந்தம்(34), அருண்குமார் ஆகிய 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இவர்கள் மீது 2019 மே 21-ல் கோவை மகளிர் கோர்ட்டில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகும், வழக்கை விசாரிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

இதனால் வழக்கை விரைந்து விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பின் 2021-ம் ஆண்டு நவம்பர் 11-ல் 9 பேர் மீதும் கூட்டு பாலியல் பலாத்காரம், பெண்கள் கடத்தல், கூட்டுச்சதி, மானபங்கம் செய்தல், வன்கொடுமை, ஆபாச வீடியோவை பரப்புதல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி குற்றம் புரிதல் உள்பட 10 சட்ட பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேலாகியும் சாட்சி விசாரணை தொடங்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அதற்காக ஒதுக்கப்பட்ட தனி அறையில், மகளிர் கோர்ட்டு நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில் சாட்சி விசாரணை தொடங்கியது.

அறையின் கதவுகள் மூடப்பட்டு, இன்கேமரா முறையில் ஆன்லைன் வாயிலாக சாட்சியம் பெறப்பட்டது. இந்த விசாரணையின்போது குற்றம்சாட்டப்பட்டவர்கள் கோர்ட்டிற்கு அழைத்து வரப்படவில்லை. அவர்கள் சிறையில் இருந்தபடி வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டனர்.

அதேபோன்று பாதிக்கப்பட்டவர்களும் அழைத்து வரப்படாமல் ரகசிய இடத்தில் இருந்தவாறு வீடியோ கான்பரன்ஸ் மூலமாக சாட்சியம் அளித்தனர்.

பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு 3 ஆண்டுகளுக்கு பிறகு சாட்சி விசாரணை தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News