பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கோவை கோர்ட்டில் குற்றவாளிகள் 9 பேர் ஆஜர்
- கடந்த 2021-ம் ஆண்டு சி.பி.ஐ விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
- சி.பி.ஐ. தாக்கல் செய்த கூடுதல் ஆவணங்களின் நகல்கள் கேட்டு 9 பேரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.
கோவை:
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வீடியோக்கள் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், ஹிரன்பால், பாபு, அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை மகளிர் கோர்ட்டில் நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட 8 பெண்கள் வாக்குமூலம் கொடுத்துள்ள நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் விசாரணை நடைபெற்று வந்தது.
கடந்த 2021-ம் ஆண்டு சி.பி.ஐ விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்தநிலையில் அதில் கூடுதல் ஆவணங்களையும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் 30-க்கும் மேற்பட்ட பாலியல் துன்புறுத்தல் வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சி.பி.ஐ தாக்கல் செய்த கூடுதல் ஆவணங்களின் நகல்கள் கேட்டு 9 பேரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்தநிலையில் இன்று 9 பேரும் கோவை மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி நந்தினி தேவி முன்னிலையில் குற்றவாளிகள் 9 பேர் முன்னிலையிலும் கைப்பற்றப்பட்ட வீடியோக்கள் ஆய்வு செய்யப்பட்டு, அடையாளம் காணப்பட்டது.
கடந்த ஒரு வருடமாக வீடியோ கான்பரன்சிங்கில் விசாரணைக்கு 9 பேரும் ஆஜராகி வந்தனர். தற்போது சேலம் ஜெயிலில் உள்ள இவர்கள் ஒரு வருடத்திற்கு பின்பு இன்று கோர்ட்டில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.