டாஸ்மாக் கடையில் வாங்கிய மது பாட்டிலில் பூரான்- குடிமகன் அதிர்ச்சி
- சீனாவில் இது (பூரான்) முக்கியமான உணவு பொருள். இதனை பெரிதாக நினைக்க வேண்டாம் என விற்பனையாளர் அலட்சியமாக பதில் கூறினார்.
- மது பாட்டிலை வாங்கிக் கொண்ட விற்பனையாளர் வேறு பாட்டிலை கொடுத்து சமாதானம் பேசி அனுப்பி வைத்துள்ளார்.
குழித்துறை:
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த மேல்புறம் பகுதியில் உள்ள டாஸ்மார்க் கடைக்கு நண்பர்கள் 2 பேர் வந்தனர். அவர்கள் 2 குவார்ட்டர் பாட்டில்கள் வாங்கியுள்ளனர். அதனை திறக்க முயன்றபோது ஒரு பாட்டிலில் ஏதோ பூச்சி கிடப்பது போல் தெரியவந்தது. பாட்டிலை குலுக்கி பார்த்த போது, அதில் கிடந்தது பூரான் என தெரியவர அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக இது பற்றி அங்கிருந்த விற்பனையாளரிடம் கூறியபோது, சீனாவில் இது (பூரான்) முக்கியமான உணவு பொருள். இதனை பெரிதாக நினைக்க வேண்டாம் என அவர் அலட்சியமாக பதில் கூறினார். இதனால் மது அருந்த வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அந்த மது பாட்டிலை வாங்கிக் கொண்ட விற்பனையாளர் வேறு பாட்டிலை கொடுத்து சமாதானம் பேசி அனுப்பி வைத்துள்ளார்.
இருப்பினும் அதிர்ச்சியில் இருந்து மீளாத குடிமகன், பூரான் கிடக்கும் மது பாட்டிலை படம் பிடித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளார். அரசு விற்கின்ற மதுபானங்களில் தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடந்து வருவதாகவும், இது குறித்து தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குடிமகன் வீடியோவில் தெரிவித்திருப்பது தற்போது வைரலாகி உள்ளது.