குமரி மாவட்டத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களுக்கு 'சீல்' வைப்பு
- தமிழகத்தில் சென்னை, ராமநாதபுரம், கோவை மாவட்டங்களில் செயல்பட்டு வந்த அலுவலகங்களுக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது.
- வடக்கு சூரங்குடியில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் கிளை அலுவலகத்திற்கும் இன்று அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
நாகர்கோவில்:
நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை ஆகியவற்றை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டதாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மீது புகார் கூறப்பட்டது. இதையடுத்து தமிழகம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு அலுவலகங்கள் மற்றும் அதன் நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு பிரிவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதன் அடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தியது. தொடர்ந்து நாட்டின் ஒற்றுமை மற்றும் இறையாண்மை ஆகியவற்றை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டதாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து பல்வேறு நகரங்களில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு அலுவலகங்களுக்கு 'சீல்' வைக்கப்பட்டது. தமிழகத்தில் சென்னை, ராமநாதபுரம், கோவை மாவட்டங்களில் செயல்பட்டு வந்த அலுவலகங்களுக்கும் 'சீல்' வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை குமரி மாவட்டத்திலும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மீதான நடவடிக்கை தொடங்கியது. இளங்கடை பகுதியில் உள்ள பி.எப்.ஐ. தலைமை அலுவலகத்தில் இன்று காலை போலீஸ் துணை சூப்பிரண்டு நவீன் குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் திருமுருகன், ஜெயலட்சுமி மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து அகஸ்தீசுவரம் தாசில்தார் சேகர் மற்றும் வருவாய்த் துறையினர் அங்கு வந்தனர். அதன்பிறகு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு அலுவலகத்திற்கு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். அந்த அலுவலகத்தின் கதவில் நோட்டீசும் ஒட்டப்பட்டது.
இதேபோல் வடக்கு சூரங்குடியில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் கிளை அலுவலகத்திற்கும் இன்று அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். இந்த சம்பவங்களால் மாவட்டத்தில் பதட்டம் நிலவுவதால் போலீசார் பாதுகாப்பாக முக்கிய இடங்களில் குவிக்கப்பட்டுள்ளனர்.