தமிழ்நாடு

மணிப்பூர் கலவரத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும்- நெல்லையில் எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் பேட்டி

Published On 2023-08-03 10:01 GMT   |   Update On 2023-08-03 10:01 GMT
  • பா.ஜனதா ஆட்சியில் நாட்டின் ஜனநாயகம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
  • ஒடுக்கப்பட்ட சிறுபான்மை, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் மிகவும் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

நெல்லை:

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று மேலப்பாளையத்தில் உள்ள கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மணிப்பூரில் கிறிஸ்தவ பழங்குடியின மக்களுக்கு எதிராக 3 மாதங்களாக கலவரம் நீடித்து வரும் நிலையில், சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கியுள்ள அரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் கலவரத்தால் மிகப்பெரும் பொருட் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

பா.ஜனதா ஆட்சியில் நாட்டின் ஜனநாயகம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட சிறுபான்மை, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் மிகவும் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

மணிப்பூர், அரியானா கலவரங்கள் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்பு நடவடிக்கைகளை தடுக்கத் தவறிய பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பதவி விலக வேண்டும்.

பாராளுமன்றத்தில் காட்டு வளங்களை தனியாருக்குத் தாரை வார்க்கும் வகையில் வனப்பாதுகாப்பு திருத்த சட்ட மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இதனை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் வகையில் பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் ஒப்புதல் பெறாமலே காடுகளில் திட்டங்களை நிறைவேற்றும் வகையில் இச்சட்ட மசோதாவின் சரத்துகள் அமைந்துள்ளதால் இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

நெய்வேலியில் என்.எல்.சியின் 2-வது சுரங்க விரிவாக்கத் திட்டத்திற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தி கனரக வாகனங்களை கொண்டு பயிர்களை சேதப்படுத்தி அத்துமீறும் என்.எல்.சி. நிர்வாகத்தின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யும் நடவடிக்கையில், பாரபட்சம் பாராமல் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை தமிழக அரசு விடுதலை செய்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News