ஸ்ரீரங்கத்தில் தனியார் வங்கி ஏ.எடி.எம். எந்திரத்தை உடைத்து மர்ம நபர் கொள்ளை முயற்சி
- மும்பையில் உள்ள வங்கியின் கட்டுப்பாட்டு அறையில் அலாரம் ஒலித்துள்ளது.
- போலீசார் விரைந்து வந்ததால் ஏ.டி.எம். மையத்தில் இருந்த பல லட்சம் பணம் தப்பியது.
திருச்சி:
திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலையில் இருந்து அம்மா மண்டபம் செல்லும் சாலையில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் அமைந்துள்ளது. இதனை அப்பகுதியை சேர்ந்த வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். இருந்தபோதிலும் இந்த ஏ.டி.எம். மையத்திற்கு காவலாளி யாரும் நியமிக்கப்படவில்லை.
இந்தநிலையில் இன்று அதிகாலை சுமார் 2.45 மணியளவில் அந்த ஏ.டி.எம். மையத்திற்கு மர்ம நபர் ஒருவர் வந்தார். முகமூடி, குல்லா மற்றும் கையுறை அணிந்திருந்த அவர் கையில் கட்டிங் எந்திரம், வயர், உளி உள்ளிட்ட பொருட்களை வைத்திருந்தார். கடுமையான பனிப்பொழிவு, அதிகாலை நேரம் என்பதால் சாலையில் ஆட்கள் நடமாட்டம் துளியும் இல்லை.
முன்னதாக உள்ளேயிருந்த கண்காணிப்பு கேமரா மீது கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி தான் பதிவாவதில் இருந்து தப்பித்தார். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அந்த மர்ம நபர், ஏ.டி.எம். மையத்திற்குள் சென்று சாவகாசமாக தான் கொண்டு வந்திருந்த வயரை அந்த எந்திரத்திற்கு பின்னால் இணைத்து கட்டிங் எந்திரம் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தின் போல்ட்டுகளை கழற்றியுள்ளார். மேலும் பணம் வைக்கப்பட்டிருக்கும் கவச பெட்டியையும் உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதற்கிடையே மும்பையில் உள்ள இந்த வங்கியின் கட்டுப்பாட்டு அறையில் அலாரம் ஒலித்துள்ளது. உடனே உஷாரான அந்த அறையில் பணியில் இருந்த ஊழியர்கள் கேமராவை கண்காணித்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் ஏ.டி.எம். மையத்தினை உடைத்து கொண்டிருந்ததை பார்த்துவிட்டனர். உடனடியாக அவர்கள் திருச்சி நெம்பர் 1 டோல்கேட் தனியார் வங்கி கிளை மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் வங்கி மேலாளர் ஸ்ரீரங்கம் போலீசாரை செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். அடுத்த விநாடி மின்னல் வேகத்தில் செயல்பட்ட ஸ்ரீரங்கம் போலீசார், ரோந்து போலீசார் ஆகியோர் கொள்ளை முயற்சி நடந்த ஏ.டி.எம். மையத்தை நோக்கி சென்றனர். அதற்குள் சுதாரித்துக்கொண்ட கொள்ளையன் அங்கிருந்த நைசாக தப்பிவிட்டார். போலீசார் வந்து பார்த்தபோது அங்கு வயர், கட்டிங் எந்திரம் மட்டும் கிடந்தது.
போலீசார் விரைந்து வந்ததால் ஏ.டி.எம். மையத்தில் இருந்த பல லட்சம் பணம் தப்பியது. இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதல்கட்ட விசாரணையை தொடங்கினர்.
இதில் ஏ.டி.எம். மையத்திற்குள் அந்த மர்ம நபர் நுழைவது, உள்ளே இருந்த கேமராவை கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி மறைப்பது, கொள்ளையனின் கண்கள் ஆகியவையும், அவசரம் அவசரமாக அந்த நபர் வெளியேறும் காட்சியும் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் கொள்ளையனை போலீசார் தேடி வருகிறார்கள்.
மேலும் சம்பவம் நடந்த ஏ.டி.எம். மையத்தை ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனர் நிவேதா லட்சுமி, குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பெரியசாமி ஆகியோர் பார்வையிட்டனர். இன்று அதிகாலை ஏ.டி.எம். மையத்தில் நடந்த கொள்ளை முயற்சி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.