தமிழ்நாடு

விபத்தை ஏற்படுத்திய தனியார் பள்ளி பேருந்து

தனியார் பள்ளி பஸ் சக்கரத்தில் சிக்கி 1½ வயது குழந்தை பலி

Published On 2022-08-17 08:20 GMT   |   Update On 2022-08-17 08:20 GMT
  • பள்ளி பஸ்களின் வெளிபக்கம், உள்பக்கம் சி.சி.டி.வி. கேமரா பொருத்த வேண்டும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவுறுத்தி இருக்கிறது.
  • டிரைவரின் கவனக்குறைவால் பஸ்சை இயக்கியதால் இந்த விபத்து நேர்ந்துள்ளது என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த தலைவாசல் தாலுகா லத்துவாடி கிராமத்தை சேர்ந்தவர் காசி. கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சுதா. இந்த தம்பதிக்கு 4 வயதில் வேதாசினி என்ற மகளும், 1½ வயதில் பவனிகாஸ்ரீ என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.

வேதாசினி, வீரகனூரில் உள்ள விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வருகிறாள்.

வழக்கம் போல் இன்று காலை சுதா, தனது இளைய மகள் பவனிகாஸ்ரீவை வீட்டில் விட்டுவிட்டு தனது மூத்த மகள் வேதாசினியை பள்ளிக்கு செல்லும் பஸ்சில் ஏற்றி விடுவதற்காக வீட்டின் வெளியே உள்ள நெடுஞ்சாலைக்கு அழைத்து வந்தார். அப்போது வீட்டில் இருந்த அவரது 1½ வயது குழந்தை பவனிகாஸ்ரீ அங்கு வந்ததை கவனிக்கவில்லை.

இந்த நிலையில் பள்ளி பஸ்சில் வேதாசினி ஏறியதும், டிரைவர் பஸ்சை எடுத்தார். அப்போது கீழே நின்று கொண்டிருந்த பவனிகாஸ்ரீ மீது பள்ளி பஸ் சக்கரம் ஏறியதில் பவனிகாஸ்ரீ உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதைக்கண்டு தாய் சுதா, கதறி துடித்தார். மகள் உடலை மடியில் வைத்து கதறி அழுதார். மேலும் துக்கம் தளாமல் சுதா மயக்கம் அடைந்தார்.

இந்த சம்பவத்தை கேள்விப்பட்டதும், அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். பஸ்சை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து வீரகனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு, பிரேத சோதனைக்கு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பள்ளி பஸ்களின் வெளிபக்கம், உள்பக்கம் சி.சி.டி.வி. கேமரா பொருத்த வேண்டும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவுறுத்தி இருக்கிறது. ஆனால் அந்த பஸ்சில் கண்காணிப்பு கேமரா இல்லை.

பஸ்சின் முன்பக்கம், பின்பக்கம், பக்கவாட்டில் குழந்தைகள் அல்லது பொதுமக்கள் நிற்கிறார்களா? என கவனித்து பஸ்சை இயக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனால் டிரைவர், கிளீனர் இதை கவனித்து பஸ்சை இயக்கவில்லை. டிரைவரின் கவனக்குறைவால் பஸ்சை இயக்கியதால் இந்த விபத்து நேர்ந்துள்ளது என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதனால் டிரைவர், கிளீனரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்து வருகின்றனர்.

ஏற்கனவே சமீபத்தில் சென்னையில் பள்ளி பஸ் ஒன்று பின்பக்கமாக இயக்கியதால் பள்ளி குழந்தை டயரில் சிக்கி பலியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News