தமிழ்நாடு

மருத்துவ கவுன்சிலிங் தரவரிசை பட்டியல் வெளியீடு

Published On 2024-08-19 06:50 GMT   |   Update On 2024-08-19 08:59 GMT
  • மருத்துவ படிப்பில் சேருவதற்கு 43,063 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
  • 2-வது மற்றும் 3-வது இடங்களை சென்னை மாணவ-மாணவிகள் பெற்றுள்ளனர்.

சென்னை:

எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் மாணவ-மாணவிகள் சேருவதற்கான பொது கலந்தாய்வு வருகிற 21-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

சென்னை கிண்டியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தரவரிசை பட்டியலை வெளியிட்டு நிருபர்களிடம் கூறியதாவது:-

மருத்துவ படிப்பில் சேருவதற்கு 43,063 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கடந்த ஆண்டை காட்டிலும் 272 பேர் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர். அரசு பள்ளி மாணவர்களின் உள் ஒதுக்கீட்டிற்கு 3733 பேரும் விளையாட்டு பிரிவுக்கு 343 பேரும், முன்னாள் படை வீரர் பிரிவுக்கு 455 பேரும், மாற்றுத்திறனாளிகள் பிரிவுக்கு 133 பேரும் விண்ணப்பித்து இருந்தனர்.

விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தர வரிசை பட்டியல் தயார் செய்யப்பட்டதில் அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கு முதல் 10 இடங்களை பெற்ற தகுதியான மாணவ-மாணவிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் 720 மதிப்பெண் பெற்று மாணவர் ரஜனிஷ் முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் நாமக்கல் கிரீன்பார்க் இண்டர் நேஷனல் பள்ளி மாணவர் ஆவார். இவரது சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் வழுதூர் ரெட்டி கிராமம் ஆகும்.

2-வது மற்றும் 3-வது இடங்களை சென்னை மாணவ-மாணவிகள் பெற்றுள்ளனர். அயனப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவர் சையத் ஆரிப்பின் 715 மதிப்பெண் பெற்று 2-வது இடத்தையும் மாணவி ஜைலஜா 3-வது இடத்தையும் பிடித்தனர்.

பொன்னேரி பஞ்செட்டி வேலம்மாள் பள்ளி மாணவர் ஸ்ரீராம் 715 மதிப்பெண் பெற்று 4-வது இடத்தை பிடித்துள்ளார்.

தரவரிசை பட்டியலில் 5, 6, 7-வது இடங்களுக்கு நாமக்கல் கிரீன்பார்க் பள்ளி மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

8-வது இடத்திற்கு சென்னை மாணவி ரோஷினியும், 9-வது இடத்திற்கு கிரீன்பார்க் மாணவர் விக்னேசும் , 10-வது இடத்துக்கு கோவையை சேர்ந்த விஜய் கிர்த்திக் சசிகுமார் ஆகியோரும் இடம் பெற்றனர்.

அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் 669 மதிப்பெண் பெற்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கொங்க வேம்பு கிராமத்தை சேர்ந்த மாணவி முதலிடம் பிடித்துள்ளார். இவர் சைதாப்பேட்டை அரசு பயிற்சி மையத்தில் படித்தவர்.

அதே மையத்தில் படித்த காயத்திரி தேவி 668 மார்க் எடுத்து 2-வது இடம் வகித்தார். இவர் சேலம் தார மங்கலத்தை சேர்ந்தவர். 3-வது இடத்தை திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம் பேட்டை மாணவி அனுசியா பிடித்தார். இவர் பெற்ற மதிப்பெண் 665.

இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். மொத்த இடங்கள் 6630 ஆகும். கடந்த ஆண்டை விட கூடுதலாக 150 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறும். அரசு பல் மருத்துவ கல்லூரிகளில் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் 1683 இடங்கள் உள்ளன.

7.5 சதவீத ஒதுக்கீட்டிற்கான அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் 496 இடங்கள் உள்ளன. பி.டி.எஸ். இடங்கள் 126 உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News