தமிழ்நாடு

1 லட்சம் மாணவிகள் பயன்பெறும் 'புதுமைப்பெண்' 2-ம் கட்ட திட்டம்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

Published On 2023-02-08 05:51 GMT   |   Update On 2023-02-08 06:29 GMT
  • குடும்ப சூழ்நிலை, வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக 'புதுமைப் பெண்' திட்டம் உதவுவதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்து வந்தனர்.
  • புதுமைப்பெண் இரண்டாம் கட்ட தொடக்க விழா நிகழ்ச்சி இன்று காலை சென்னை ஆவடியை அடுத்த பட்டாபிராம் இந்து கல்லூரியில் நடைபெற்றது.

சென்னை:

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித்தொகை வழங்கும் 'புதுமைப்பெண் திட்டம்' தமிழ்நாட்டில் செயல்பாட்டில் உள்ளது.

இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 5-ந் தேதி டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் மூலம் 1 லட்சத்து 16 ஆயிரத்து 342 மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தின் மூலம் இடை நிற்றலில் இருந்து 12 ஆயிரம் மாணவிகள் மீண்டும் உயர்கல்வியில் சேர்ந்து பயன் அடைந்து வருகின்றனர்.

இந்த திட்டத்துக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக 'புதுமைப் பெண்' திட்டம் உதவுவதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்து வந்தனர்.

இதைத் தொடர்ந்து புதுமைப்பெண் இரண்டாம் கட்ட தொடக்க விழா நிகழ்ச்சி இன்று காலை சென்னை ஆவடியை அடுத்த பட்டாபிராம் இந்து கல்லூரியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று மேலும் 1 லட்சத்து 4 ஆயிரத்து 347 மாணவிகள் பயன்பெறும் வகையில் 'புதுமைப்பெண்' திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, கீதாஜீவன், ஆவடி சா.மு.நாசர், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News