தமிழ்நாடு (Tamil Nadu)

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை: குற்றாலம் மெயினருவி, ஐந்தருவியில் குளிக்க தடை

Published On 2024-08-31 04:58 GMT   |   Update On 2024-08-31 04:58 GMT
  • மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 68.18 அடியாக உள்ளது.
  • விவசாயிகள், பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

நெல்லை:

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்தது. குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் நகர் பகுதிகளிலும் மழை பெய்தது.

நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சேர்வலாறு, பாபநாசம் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் திடீர் மழையால் அணைகளுக்கு சற்று நீர்வரத்து ஏற்பட்டது. அந்த அணைகளுக்கு வினாடிக்கு 1,102 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து 1004 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சேர்வலாறு அணை பகுதியில் 7 மில்லிமீட்டரும், பாபநாசத்தில் 2 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. பாபநாசத்தில் 108.70 அடி நீர் இருப்பு உள்ளது. சேர்வலாறில் நேற்று 114 அடி நீர் இருந்த நிலையில், இன்று சுமார் 2 அடி வரை அதிகரித்து 116.89 அடி நீர் இருப்பு உள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 68.18 அடியாக உள்ளது.

50 அடி கொள்ளளவு கொண்ட வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 15.50 அடியாகவும், கொடுமுடியாறு அணையில் 28 அடியும், நம்பியாறு அணை நீர்மட்டம் 13 அடியாகவும் இருக்கிறது. அணை பகுதிகளில் இந்த ஆண்டு பரவலாக பெய்த மழை காரணமாக நீர் இருப்பு கடந்த ஆண்டை காட்டிலும் அதிகமாக இருக்கிறது. இதனால் நெல் சாகுபடி பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.

தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று காலையில் இருந்தே நகர் பகுதி மற்றும் மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் வானில் கருமேகம் திரண்டு காணப்பட்டது. தொடர்ந்து பரவலாக மழை பெய்தது. குறிப்பாக செங்கோட்டை சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்தது. அங்கு 17 மில்லிமீட்டர் மழை பெய்தது.

தென்காசி நகர் பகுதி, பாவூர்சத்திரம், ஆலங்குளம், சுரண்டை, கடையம், சிவகிரி, கடையநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதோடு, இதமான காற்றும் வீசியது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள குண்டாறு, அடவிநயினார் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டியது. குறிப்பாக குண்டாறு அணை பகுதியில் நேற்று அதிகாலையில் தொடங்கி மதியம் வரையிலும் கனமழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 41 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

குண்டாறு அணை ஏற்கனவே மாதக்கணக்கில் நிரம்பி வழிவதால், அணைக்கு வரும் 48 கனஅடி நீரும் அப்படியே உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. கடனா அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 9 மில்லிமீட்டர் மழை பதிவானது. அந்த அணையில் 60 அடி நீர் இருப்பு உள்ளது. 84 அடி கொண்டராமநதி அணை நீர்மட்டம் 65 அடியாக உள்ளது. மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான அடவிநயினாரில் 109.50 அடியாக உள்ளது. அந்த அணைக்கு வினாடிக்கு 36 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

குற்றாலம் மலைப்பகுதியில் பெய்துவரும் கனமழை காரணமாக மெயினருவி, ஐந்தருவியில் வெள்ளம் நீடிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இதனால் சுற்றுலாப்பயணிகளுக்கு அவ்வப்போது அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. தண்ணீர் வரத்து அதிகரிக்கும்போது தடை விதிக்கப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி மெயினருவி, ஐந்தருவியில் நீர் வரத்து அதிகரித்து காணப்படுவதால், சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News