நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக மழை
- மாநகரில் இன்றும் காலை முதலே மாநகர பகுதி முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
- சேரன்மகாதேவி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலும் நேற்று மாலையில் இடி-மின்னலுடன் மழை பெய்தது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று பகலில் வெயில் அடித்த நிலையில் பிற்பகலில் பரவலாக மழை பெய்தது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று மாலையில் வானில் கருமேக கூட்டங்கள் திரண்டு கனமழை பெய்ய ஆரம்பித்தது. மாநகரில் சந்திப்பு, மேலப்பாளையம், பாளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் பரவலாக மழை பெய்தது.
பேட்டையில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. தொடர்ந்து சாலைகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
நெல்லை மண்டலத்துக்கு உட்பட்ட மாநகராட்சி 17-வது வார்டு பழைய பேட்டை சர்தார்புரம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக சாலையே தெரியாத அளவிற்கு மழைநீர் குளம்போல் தேங்கி கிடந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் தேங்கிய மழைநீரில் நடந்து செல்லமுடியாமல் சிரமத்துடன் சென்றனர்.
மாநகரில் இன்றும் காலை முதலே மாநகர பகுதி முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் கீழ் பகுதியில் மழைநீர் தேங்கி கிடந்தது. மாநகரில் பாதாள சாக்கடை பணிகள் நடக்கும் பகுதிகளில் மழை காரணாக சாலைகள் சகதியாக காணப்பட்டது. பாளை வ.உ.சி. மைதானம், மகாராஜாநகர் சாலைகளிலும் குளம் போல் மழைநீர் தேங்கி கிடந்தது.
ஆயுத பூஜை தொடர் விடுமுறைக்கு பின்னர் இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், காலையில் இருந்தே பெய்த மழையால் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதி அடைந்தனர். பணிக்கு செல்வோர் குடை பிடித்தபடி சென்றனர். அதிகபட்சமாக பாளையில் 11 மில்லிமீட்டரும், நெல்லையில் 4.4 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
மாவட்டத்தின் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை திசையன்விளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் திடீர் கனமழை பெய்தது. அங்குள்ள சாலையோரம் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் சாலையோர வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர். இன்றும் காலையில் இருந்தே சாரல் அடித்தது. இதேபோல் களக்காடு, மூலைக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இன்று சாலையில் சாரல் மழை பெய்தது.
சேரன்மகாதேவி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலும் நேற்று மாலையில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. இன்று அதிகாலையில் இருந்து விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்கு செல்பவர்கள் அவதி அடைந்தனர். மாவட்டத்தில் சேரன்மகாதேவியில் 10.6 மில்லிமீட்டரும், அம்பையில் 5.6 மில்லிமீட்டரும், களக்காடு மற்றும் நாங்குநேரியில் தலா 3 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை அவ்வளவாக பெய்யவில்லை. என்றாலும் மணிமுத்தாறு அணை பகுதியில் மட்டும் 1.6 மில்லிமீட்டர் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள காக்காச்சி, ஊத்து, நாலுமுக்கு, மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
தென்காசி மாவட்டத்தில் நேற்று பிற்பகலில் இருந்து வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. இன்றும் காலையில் இருந்தே வெயில் அடிக்கவில்லை. இதனால் ரம்மியமான சூழ்நிலை நிலவியது. சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 44 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. சிவகிரியில் லேசான சாரல் பெய்தது.
ஆலங்குளம், பாவூர்சத்திரம், கடையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது. அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை பெய்தது. கருப்பாநதி அணை நீர்பிடிப்பு பகுதிகளில் 10 மில்லிமீட்டரும், குண்டாறு அணை பகுதியில் 2 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள குற்றாலத்தில் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. விடுமுறை முடிந்துவிட்டதால் அருவிக்கரைகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படவில்லை.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பிற்பகலில் தொடங்கி இரவு வரையிலும் ஏராளமான இடங்களில் சாரல் மழை பெய்த வண்ணம் இருந்தது. குறிப்பாக எட்டயபுரம், கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
அதிகபட்சமாக எட்டையபுரத்தில் 15 மில்லிமீட்டர் மழை பெய்தது. கோவில்பட்டியில் 7 மில்லிமீட்டரும், சூரன்குடி, கழுகுமலையில் தலா 6 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது. சாத்தான்குளம் சுற்றுவட்டாரத்தில் விட்டு விட்டு சாரல் அடித்தது. இன்றும் காலையில் இருந்தே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது.