தமிழகத்தில் 19-ந்தேதிக்கு பிறகு மீண்டும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆராய்ச்சி நிபுணர் கணிப்பு
- இயல்பைவிட 17 சதவீதம் அளவுக்கு குறைவாகவே மழை பெய்துள்ளது.
- தமிழகத்தில் புயலால் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்று வானிலை மையம் கணித்து உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பைவிட குறைவாகவே பெய்துள்ளது. அக்டோபர் 1 முதல் தற்போது வரையில் 1½ மாதத்தில் எப்போதும் 283 மி.மீ. மழை பெய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு 243 மி.மீ. அளவுக்கே மழை பெய்துள்ளது. இயல்பைவிட 17 சதவீதம் அளவுக்கு குறைவாகவே மழை பெய்துள்ளது.
இந்நிலையில் மத்திய மேற்கு வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது புயலாக மாறி வங்கதேச கடற்கரை நோக்கி சென்றுவிட்டது.
இதனால் தமிழகத்தில் புயலால் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்று வானிலை மையம் கணித்து உள்ளது.
இந்நிலையில் வருகிற 19-ந்தேதிக்கு பிறகு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை நிபுணர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராம நாதபுரம், சிவகங்கை, புதுக் கோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மறுநாள் 20-ந்தேதி தமிழகம்-புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும், திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. 21, 22 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கணித்து உள்ளனர்.