தமிழ்நாடு

தமிழக அரசு கைத்தறி நெசவாளரிடம் வேட்டி-சேலை வாங்கவேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

Published On 2024-08-30 06:08 GMT   |   Update On 2024-08-30 06:09 GMT
  • தமிழ்நாட்டு மக்களை தவறாக வழி நடத்தும் செயலாகும்.
  • இன்னொரு தரப்பினரின் நலன்களை பாதுகாக்கக் கூடாது.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்ப்புத்தாண்டு மற்றும் தைத்திங்கள் நாளையொட்டி தமிழக மக்களுக்கு வழங்குவதற்காக ஒரு கோடியே 77 லட்சத்து 64,476 புடவைகளும், ஒரு கோடியே 77 லட்சத்து 22,995 வேட்டிகளும் உற்பத்தி செய்யப்பட உள்ளன. இந்த வேட்டி, சேலைகள் முழுவதையும் விசைத்தறி நெசவாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்ய தமிழக அரசின் கைத்தறி, கைத்திறன் மற்றும் துணிநூல் துறை முடிவு செய்துள்ளது.

இலவச வேட்டி, சேலை கொள்முதலில் கைத்தறி நெசவாளர்களின் வேலை வாய்ப்பை முற்றிலுமாக பறித்திருக்கும் தமிழக அரசு, இந்த உண்மையை முற்றிலுமாக மறைத்து உள்ளது.

அதுமட்டுமின்றி, ''இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் கைத்தறி மற்றும் பெடல் தறிகள் மூலம் உற்பத்தி செய்யப்படுவதால், கைத்தறி மற்றும் பெடல்தறி நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்புகளுக்கு இத்திட்டம் பெரிதும் உதவியாக இருக்கிறது'' என்று அப்பட்டமான பொய்யை தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. கைத்தறி நெசவாளர்களிடமிருந்து ஒரு வேட்டி, சேலை கூட வாங்காமல், அனைத்து வேட்டி, சேலைகளும் கைத்தறி மற்றும் பெடல் தறிகள் மூலம் உற்பத்தி செய்யப்படுவதாக தமிழக அரசு கூறியிருப்பது தமிழ்நாட்டு மக்களை தவறாக வழி நடத்தும் செயலாகும்.

விசைத்தறியாளர்கள், கைத்தறி நெசவாளர்கள் ஆகிய இரு தரப்பினரின் நலன்களையும் பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு. ஆனால், ஒரு தரப்பினரின் நலன்களை புறக்கணித்து விட்டு, இன்னொரு தரப்பினரின் நலன்களை பாதுகாக்கக் கூடாது.

இது பெரும் தவறாகும். எனவே, இலவச வேட்டி, சேலை தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை ரத்து செய்து விட்டு, கடந்த ஆண்டைப் போலவே கைத்தறி நெசவாளர்களிடமிருந்து குறைந்தது மூன்றில் ஒரு பங்கு வேட்டி, சேலைகளையாவது கொள்முதல் செய்யும் வகையில் புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News